சென்னையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் - அமைச்சர்கள் ஆய்வு
பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களிடம் அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.;
சென்னை,
நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொளத்தூர் ஏரி பூங்கா சேவை சாலையின் பணிகளையும், கொளத்தூர், செந்தில் நகரில் கட்டப்பட்டு வரும் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலத்தின் பணிகளையும் மற்றும் ஜி.என்.டி சாலை, பாடி மேம்பாலம் அருகில் சாலை அகலப்படுத்துதல் ஆகிய பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளர்களை அறிவுறுத்தினர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (10.01.2026) பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கேசேகர்பாபு ஆகியோர் கொளத்தூர்-பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் உள்வட்ட சாலையை அடைவதற்கும், கொளத்தூர் ஏரி பூங்கா செல்வதற்கும் 600 மீட்டர் நீளம் மற்றும் 7.50 மீட்டர் அகலம் கொண்ட சேவை சாலையின் இருபுறமும் 2.00 மீட்டர் அகலத்திற்கு நடைபாதையும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, சாலைப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளர்களை அறிவுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில், கொளத்தூர், செந்தில் நகரில் ரூ.15.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் மற்றும் ஜி.என்.டி சாலை, பாடி மேம்பாலம் அருகில் ரூ.155.35 கோடி மதிப்பீட்டில் சாலை மற்றும் மேம்பாலம் அகலப்படுத்துதல் முன்னேற்றப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளர்களை அறிவுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கொளத்தூர் பெரியார் நகர் முதல்வர் படைப்பகத்தையும் மற்றும் கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில் அமைந்துள்ள குளக்கரை பூங்காவையும் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பேருந்து நிலையத்தின் பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுகளின்போது மேயர் திருமதி.ஆர்.பிரியா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.