கிருஷ்ணகிரியில் ரூ.2,885 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் - இன்று அடிக்கல் நாட்டுகிறார் மு.க.ஸ்டாலின்

கிருஷ்ணகிரியில் இன்று நடைபெறும் பிரமாண்ட அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.;

Update:2025-09-14 08:23 IST

கோப்புப்படம்


தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றார். முன்னதாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஓசூர் பேளகொண்டப்பள்ளியில் உள்ள தனேஜா விமான ஓடுதளத்துக்கு சென்றடைந்தார்.

அங்கு அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் கிருஷ்ணகிரிக்கு புறப்படும் அவருக்கு கிருஷ்ணகிரியில் சுங்கச்சாவடி அருகில் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

அதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை ரோடு மேம்பாலத்தில் இருந்து முதல்-அமைச்சரின் ரோடு ஷோ நிகழ்ச்சி தொடங்கியது. அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ரோடு ஷோ ராயக்கோட்டை மேம்பாலம், அண்ணா சிலை, பெங்களூரு சாலை வழியாக ஆர்.சி.பள்ளி ஜங்ஷன், மாவட்ட தி.மு.க. அலுவலகம் வழியாக 5 ரோடு ரவுண்டானாவை அடைகிறது.

அங்கிருந்து சென்னை சாலை பெரிய மாரியம்மன் கோவில் ஜங்ஷனுக்கு சென்ற முதல்-அமைச்சர் அங்கிருந்து சென்னை பை பாஸ் ரோடு வரையில் பொதுமக்களை சந்தித்தார். தொடர்ந்து அவர் கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நடைபெறும் பிரமாண்ட அரசு விழாவிற்கு செல்கிறார். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து புத்தகங்கள் வழங்கி வரவேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக விழா மேடை அருகில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சி அரங்குகளை முதல்-அமைச்சர் பார்வையிடுகிறார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

தொடர்ந்து விழா மேடைக்கு முதல்-அமைச்சர் வருகிறார். விழாவில் கலெக்டர் தினேஷ்குமார் வரவேற்று பேசுகிறார். தொடர்ந்து நினைவு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதன் பின்னர் முதல்-அமைச்சர் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். மேலும் நல உதவிகளை வழங்கி விழாவில் பேருரையாற்றுகிறார்.

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெறும் அரசு விழாவில், 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழா முடிந்ததும், அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு கிருஷ்ணகிரியில் காந்தி சாலையில் உள்ள மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. இல்லத்திற்கு வரும் முதல்-அமைச்சர் சிறிது நேரம் அங்கிருந்து விட்டு பின்னர் ஓசூருக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை செல்கிறார்.

டிரோன்கள் பறக்க தடை

முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டத்தில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் விமானத்தில் வந்து இறங்கும் ஓசூர் பேளகொண்டப்பள்ளி தனேஜா விமான ஓடுதளம், அரசு விழா நடைபெற கூடிய கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி ஆகிய இடங்களை மையமாக கொண்டு 2 கிலோ மீட்டர் சுற்றளவில் டிரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பை மீறி டிரோன்களை இயக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்