திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள், போலீஸ்காரர்களை கடித்து குதறிய குரங்குகள்

குரங்குகளை பிடிக்க கோவில் இணை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2025-08-25 03:30 IST

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு வருகின்றனர். தற்போது இந்த கோவிலில் குரங்குகள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தை பக்தர்கள் சாப்பிடும்போது அதை குரங்குகள் பறித்து செல்கின்றன. மேலும் பக்தர்கள் கையில் கொண்டு வரும் பார்சல்களை குரங்குகள் திடீரென பாய்ந்து பறித்து விடுகிறது.

இந்த நிலையில் நேற்று முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்த தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த மேனகா (வயது 45) என்பவர் தீபம் ஏற்றும் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது குரங்குகள் திடீரென பாய்ந்து கையில் கடித்தன.

அதேபோல் மலைக்கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் சதீஷ்குமார் (28), குமார் (33) ஆகியோரையும் குரங்குகள் கடித்தன. மேலும் 2 பெண் பக்தர்களை குரங்குகள் கடித்தன. காயமடைந்த 5 பேரும் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட பக்தர்களை குரங்குகள் கடித்துள்ளன.

எனவே முருகன் கோவிலில் பக்தர்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரியும் குரங்குகளை பிடிக்க கோவில் இணை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்