தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் வரி விலக்கு நீட்டிப்பு
மின்சார வாகனங்களுக்கான 100 சதவீதம் சாலை வரி விலக்கு 2027 டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது;
சென்னை,
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், தமிழக அரசு 2019ஆம் ஆண்டு தமிழக மின்சார வாகனக் கொள்கையை வெளியிட்டது.மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் 2022ஆம் ஆண்டு வரை 100 சதவீதம் சாலை வரி விலக்கு அளிக்கப்பட்டது.
பின்னர் இந்த சலுகை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டு, 2025 டிசம்பர் 31 வரை மாற்றப்பட்டது.அதன்படி, மின்சார வாகனங்களுக்கான சாலை வரி விலக்கு சலுகை இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்று, மின்சார வாகனங்களுக்கான 100 சதவீதம் சாலை வரி விலக்கு 2027 டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியிருப்பதாவது: “தமிழக அரசு தொழில்துறைக்கு ஆதரவான அரசு என்பதை இது காட்டுகிறது. பேட்டரிகளில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இன்னும் சார்ஜிங் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதிலும், முழு விநியோகச் சங்கிலியையும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுவதிலும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது” என்றார்.