பொன்னேரி அருகே பெண் விஏஓ சாவில் மர்மம்..காதலன் கொடுத்த பரபரப்பு புகார்
பெண் விஏஓ அருணா ஆணவக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
பொன்னேரி,
பொன்னேரி அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் அருணா (வயது 27). இவர் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட கீரப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார்.கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சியின் போது அருணாவுக்கும் பொன்னேரி அடுத்த பாக்கம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் சிவபாரதி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.நாளடைவில் இது காதலாக மாறியது. சிவ பாரதியின் சொந்த ஊர் பழனி ஆகும். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அருணாவின் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் இருவரும் இருவீட்டாரின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) அருணா திடீரென விஷம் குடித்து மயங்கியதாக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் குடும்பத்தினர் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.எனினும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அருணா பரிதாபமாக உயிரிழந்தார். குடும்ப தகராறில் அருணா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே திடீர் திருப்பமாக கிராம நிர்வாக அலுவலர் அருணாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் மாற்று சமூகத்தை சேர்ந்தவரை காதலித்ததால் வாயில் விஷம் ஊற்றி கொலை செய்யப்பட்டதாகவும் காதலனான கிராம நிர்வாக அலுவலர் சிவபாரதி திருப்பாலைவனம் போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார்.மேலும் அருணா இறப்பதற்கு முன்பு சமூக வலைத்தளத்தின் மூலமாக உறவினர்களால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தெரிவித்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
இது தொடர்பாக காதலன் சிவபாரதி திருப்பாலைவனம் போலீசில் அளித்து உள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-நான், கடந்த 2023-ம் ஆண்டு பாக்கம், கணவன் துரை கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக (வி.ஏ.ஓ) பணியில் சேர்ந்தேன். என்னுடன் சில பேர் வி.ஏ.ஓ. பணியில் அதே தேதியில் சேர்ந்தனர். அதில் ஒருவர் அருணா.
இவர் மாங்கோடு மற்றும் கீரப்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். நாங்கள் இருவரும் ஆரம்ப காலத்தில் இருந்து நண்பர்களாக பழகி வந்தோம். எங்கள் நட்பு நாளடைவில் உறுதியான நட்பாக மாறியது. கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் திருவள்ளூரில் எங்களுக்கு சர்வே பயிற்சி கொடுத்தனர்.
அப்போது எங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தது. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலியில் பேசி பழகி வந்தோம்.சில நாட்களில் திருமணமும் செய்து கொள்ள முடிவு செய்தோம்.நானும், அருணாவும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். நான் முதலில் எங்கள் காதலை வீட்டில் தெரிவித்தபோது எங்கள் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் அருணாவின் வீட்டில் சம்மதம் தெரிவிக்க வில்லை. மேலும் - அருணாவின் தம்பி அஜித் அருணாவின் வாட்ஸ் அப்பை அவரது போனில் இணைத்து அருணாவிற்கு தெரியாமல் கண்காணித்து வந்துள்ளார். அக்டோபர் 28-ந்தேதி அஜித் எங்கள் காதலை பெற்றோர் ரவி மற்றும் ஜோதி, அண்ணன் அரவிந்த் ஆகியோரிடம் தெரிவித்து ஜாதி வெறியை தூண்டி உள்ளார்.
நமது வீட்டு பெண் வேறு ஜாதி பையனை காதலிக்கிறார் என்று வீட்டில் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவி, ஜோதி, அரவிந்த், அஜித் ஆகியோர் சேர்ந்து அருணாவை கண்டபடி திட்டி கடுமையாக தாக்கி உள்ளனர்.போலீசாக பணியாற்றி வரும் அருணாவின் அண்ணன் அரவிந்த், அருணாவை சாகுமாறு கூறி தற்கொலைக்கு தூண்டி உள்ளார். இதுபற்றி அருணா மறுநாள் எனக்கு தெரிவித்தார்.
நான் 2 முறை அருணா பணிபுரியும் மாங்கோடு கிராமத்திற்கு சென்றேன். அப்போது அருணா வீட்டில் சம்மதம் வாங்கி திருமணம் செய்யலாம். வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்ய போவதாக தெரிவித்தார். அவரை சமாதானப்படுத்தி பதிவு திருமணம் செய்யலாம் என்று யோசனை கூறினேன். அதற்கு அவ்வாறு செய்தால் எனது அண்ணனும், தம்பியும் என்னையும், என் குடும்பத்தையும் ஆணவக் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.
இது சம்பந்தமாக அரவிந்த் எனக்கு செல்போனிலும், அஜித் வாட்ஸ் அப்பிலும் மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் அளிக்க சென்றபோது அருணா புகார் கொடுக்க வேண்டாம், பொறுமையாக இருக்கலாம் என்று கூறி தடுத்தார். இதனால் நான் புகார் அளிக்கவில்லை.இதற்கிடையே ஜாதியை காரணம் காட்டி அருணாவை குடும்பத்தினர் 4 பேரும் அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதனால் நான் அவருக்கு தனியாக சிம்கார்டு வாங்கி கொடுத்தேன். மேலும் தனியாக இன்ஸ்டா கிராம் கணக்கு உருவாக்கி அதில் இருவரும் பேசி வந்தோம்.
கடந்த 30-ந்தேதி மாலை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்ட அருணா," வீட்டில் உள்ள 4 பேரும் என்னை அடித்து துன்புறுத்தினர். எனக்கு கட்டாயப்படுத்தி புல் மருந்து(விஷம்) அளித்தனர். இதனால் நான் இப்போது சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்று வருகிறேன்.ரவி, ஜோதி, அஜித், அரவிந்த் ஆகியோர் வற்புறுத்தி வாயில் ஊற்றி விட்ட மருந்தால் நான் மயக்கம் அடைந்து விட்டேன். தற்போது தான் கண் விழித்தேன் என்று மெசேஜில் தெரிவித்து இருந்தார். ஆனால் 1-ந்தேதி காலை அருணா இறந்து விட்டார்.
மாற்று சமூக நபரை காதலித்ததால் அந்த 4 பேரும் சேர்ந்து அருணாவை கட்டாயப்படுத்தி விஷம் கொடுத்து கொலை செய்து விட்டனர். எனவே அருணாவை கொலை செய்த அவரது குடும்பத்தினர் 4 பேருக்கும் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெண் நிர்வாக அலுவலர் அருணா சாவில் காதலன் கொடுத்த புகாரால் பர பரப்பு ஏற்பட்டு உள்ளது. அருணா ஆணவக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் அவரது குடும்பத்தினரிடம் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
அருணாவின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை
கிராமநிர்வாக அலுவலர் அருணாவின் இறப்பு பரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இன்று காலை இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார் விசாரணைக்காக அருணாவின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறும்போது, 'சம்பவத்தன்று வெளியில் சென்று வந்தபோதே அருணா விஷம் குடித்து வந்து இருந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டு சந்தேகத்தில் விசாரித்த போதுதான் அவள் விஷம் குடித்து இருப்பது தெரிந்தது.
உடனடியாக அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். வீட்டிற்கு வரும்போது அருணா கடையில் இருந்து பிஸ்கட், ஆல்பக்கோடா பழம் வாங்கி வந்து உள்ளார். சிவபாரதியின் புகாரில் உண்மை இல்லை" என்று தெரிவித்ததாக போலீசார் கூறி உள்ளனர்.
மேலும் அருணா வேலை பார்த்த கிராமங்களிலும் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே அருணாவின் குடும்பத்தினர் மீது புகார் கொடுத்த காதலன் சிவபாரதியின் 2 செல்போன் எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. அவரை இன்று விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்து இருந்தனர். ஆனால் அவர் எங்கு உள்ளார் என்று தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருதரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னரே அருணாவின் சாவில் உண்மை நிலவரம் தெரியும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.