திருமணமான 18-வது நாளிலேயே புதுப்பெண் திடீர் மாயம்; குறுந்தகவலை பார்த்து கணவர் அதிர்ச்சி
குளச்சல் அருகே திருமணமான 18 நாளிலேயே தாலியை கழற்றி வைத்துவிட்டு புதுப்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை கேசவன்சேரி விளையை சேர்ந்தவருக்கு 31 வயது ஆகிறது. வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் தற்போது மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் கடந்த 3-ந்தேதி திருமணம் நடந்தது.பிறகு மணமக்கள் இருவரும் உறவினர் வீடுகளுக்கு விருந்துக்கு சென்றபடி இருந்தனர். இந்த நிலையில் திருமணமாகி 18-வது நாளன்று (21-ந் தேதி) மாலையில் புதுப்பெண் திடீரென மாயமாகி விட்டார். அந்த சமயத்தில் வெளியே சென்று வீடு திரும்பிய வாலிபரின் தாயார், மருமகளை காணாமல் பயந்து போனார்.
மேலும் தனது மகனுக்கு நடந்த விவரத்தை கூறி வீட்டுக்கு வரவழைத்தார். இதனை தொடர்ந்து இருவரும் பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. புதுப்பெண்ணின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதே சமயத்தில் வீட்டில் தேடிய போது தாலி செயின் மட்டும் இருந்தது. இதனால் தாலியை புதுப்பெண் கழற்றி வைத்து விட்டு சென்றிருக்கலாம் என நினைத்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் வாலிபரின் செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலமாக அவரது மனைவி குறுந்தகவல் (வாய்ஸ் மெசேஜ்) ஒன்று அனுப்பினார்.
அதில், விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். உங்களை ஏமாற்றியதற்கு என்னை மன்னித்து விடுங்கள். என்னை தேடாதீங்க, நான் வரமாட்டேன். தாலியைகூட வேண்டாம் என்று கழற்றி வைத்துவிட்டு வந்து விட்டேன். என்னால் உங்க கூட சந்தோஷமாக வாழ முடியல ‘ப்ளீஸ்’ என்று அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் கணவர் செய்வதறியாது திகைத்தார்.