நீலகிரி: ஊருக்குள் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரம்

காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.;

Update:2025-07-04 04:24 IST

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்தொரை பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தின. இதனால் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அதில் பலன் கிடைக்கவில்லை.

மேலும் தொழிலாளி ஒருவரை காட்டு யானை தாக்கி கொன்றது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாடந்தொரை பஜாரில் கடந்த வாரம் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இரவு, பகலாக செயல்படக்கூடிய டிரோன் மூலம் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதனால் கடந்த 2 நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதுதொடர்பாக கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

பாடந்தொரை, கொட்டாய்மட்டம் பகுதிகளில் மக்கள் குடியிருப்புகளில் சுற்றித் திரிந்த காட்டு யானைகளை முதுமலை வனப்பகுதிக்கு விரட்டுவதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற டிரோன் இயக்கும் குழு வரவழைக்கப்பட்டது.

அந்த குழு உதவியுடன் கூடலூர் வன கோட்ட சிறப்பு யானை பாதுகாப்பு பணி குழுவினர்களும், கள பணியாளர்களும் இணைந்து பாடந்தொரை, கொட்டாய்மட்டம் பகுதிகளில் இருந்து முதுமலை வனப்பகுதிக்கு பாதுகாப்பாக காட்டு யானைகள் விரட்டப்பட்டது. தொடர்ந்து மனித-வனவிலங்கு மோதல்கள் ஏற்படாமல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஊருக்குள் முகாம்

இதனிடையே கொட்டாய்மட்டம், குருத்துக்கொல்லி, கணியம் வயல், சரகல் வயல் பகுதியில் கூடுதலாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, வனச்சரகர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட வனத்துறையினர் டிரோன் மூலம் காட்டு யானைகளை கண்டறிந்து விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பாடந்தொரை பகுதி மக்கள் கூறும்போது, ஊருக்குள் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சில யானைகள் மட்டுமே விரட்டி உள்ளனர். மீதமுள்ள யானைகளையும் தொடர்ந்து விரட்டி கண்காணித்தால் மட்டுமே ஊருக்குள் வருவது தடுக்கப்படும் என்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்