சென்னை தவிர மற்ற இடங்களுக்கு மெட்ரோ ரெயில் திட்டம் தேவையில்லை: கார்த்தி சிதம்பரம்

எஸ்.ஐ.ஆர். பணியை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு போதிய பயிற்சி இல்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.;

Update:2025-11-24 08:29 IST

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எஸ்.ஐ.ஆர். திட்டத்தை ஒரு ஆண்டிற்கு முன்னரே நடத்தி இருக்க வேண்டும். அதில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு பணி சுமை ஏற்பட்டுள்ளது. இதில் சிலர் உயிரிழந்தும் உள்ளனர். இணைய சேவை இல்லாததால் பல இடங்களில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை.

குறுகிய காலத்தில் எஸ்.ஐ.ஆர்.-ஐ செயல்படுத்த முடியுமா? என்று தெரியவில்லை. தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையோடு செயல்பட வேண்டும். 30 நாட்களுக்குள் வாக்காளர்கள் நீக்கல் மற்றும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பதை செய்ய முடியுமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. எஸ்.ஐ.ஆர். பணியை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு போதிய பயிற்சி இல்லை. மக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க அவர்களால் முடியவில்லை.

Advertising
Advertising

பிரதமர் மோடி பீகார் தேர்தல் பிரசாரத்தின் போது அந்த மாநில மக்களை தமிழர்கள் தாக்குவதாகவும், தமிழகம் வரும்போது தமிழ் கற்றுக்கொள்ளவில்லை என்றும், அடுத்த 6 மாதத்திற்கு தமிழ்நாடு, கேரளா உணவுகள் மற்றும் கலாசாரம்தான் தனக்கு பிடிக்கும் என்றும் கூறுவார். தமிழகத்தில் சென்னை தவிர மற்ற ஊர்களுக்கு மெட்ரோ ரெயில் திட்டம் தேவையில்லை. மிகப்பெரிய நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரெயில் திட்டம் வெற்றி அடையும். பிற இடங்களில் தோல்வியைதான் தழுவும்.

மத்திய அரசு தமிழ்மொழி வளர்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்குவதில் பாரபட்சமாக செயல்படுகிறது. பிரதமர் மோடி கூறுவதை சீரியசாக எடுத்துக்கொள்ள கூடாது. தேர்தல் நேரத்தில் மட்டும் அந்தந்த மாநில மொழி மற்றும் கலாசாரத்தை நேசிப்பதாகவும், நிதி தருவதாகவும் கூறுவார். ஒவ்வொரு மாநிலத்திலும், கூட்டணி மற்றும் அரசியல் சூழ்நிலையை பொறுத்துதான் தேர்தல் முடிவுகள் இருக்கும். தமிழகத்தில் மும்முனை மற்றும் அதற்கு மேற்பட்ட கூட்டணிகள் அமைந்தால் தி.மு.க. கூட்டணி எளிதில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்