கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய மனைவியை கொன்ற வடமாநில தொழிலாளி... திருப்பூரில் பரபரப்பு

கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.;

Update:2025-09-23 21:35 IST

திருப்பூர்,

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் கவுரங்கா மண்டல் (வயது 37). அவருடைய மனைவி ரிங்கு மண்டல் (32). இந்த தம்பதிக்கு 7 வயதில் மகன் உள்ளான். கவுரங்கா மண்டல் திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில், ஒரு வாடகை வீட்டில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம், ரிங்கு மண்டல் தனது மகனை மேற்கு வங்காளத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, அவர் மட்டும் தனியாக காங்கயம் வந்தார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கவுரங்கா மண்டல், மனைவி ரிங்கு மண்டலின் கழுத்தை நெரித்து கொன்று விட்டு தலைமறைவானார்.

இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தப்பி ஓடிய கவுரங்கா மண்டலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கொல்கத்தாவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். கவுரங்கா மண்டல் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது அவர், கொல்கத்தா ரெயில் நிலையத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று, கவுரங்கா மண்டலை கைது செய்தனர். பின்னர் அவர், காங்கயம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் துருவி, துருவி போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கவுரங்கா மண்டலுக்கும், ரிங்கு மண்டலுக்கும் கடந்த 6 மாதங்களாக பிரச்சினை இருந்து வந்தது. இதனால் இவர்கள் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையே ரிங்கு மண்டல், மேற்கு வங்காளத்தில் வேறு ஒரு வாலிபருடன் குடும்பம் நடத்தி வந்தார். அந்த வாலிபருடன் பிரச்சினை ஏற்பட்டதால், அவரை விட்டு பிரிந்து, கணவர் கவுரங்கா மண்டலை தேடி காங்கயம் வந்தார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு, கள்ளக்காதலுடன் குடும்பம் நடத்தியதால் ஆத்திரமடைந்த கவுரங்கா மண்டல், தனது மனைவியை கொன்றதாக வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, கவுரங்கா மண்டலை காங்கயம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்