கோவை: சுட்டுப்பிடிக்கப்பட்ட கொள்ளையர்களில் ஒருவர் உயிரிழப்பு
உ.பி.யை சேர்ந்த ஆசிப், இர்பான், கல்லு ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர்.;
கோவை,
கோவை கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு உள்ள ஹவுசிங் யூனிட் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 14 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் 1,800 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
தினமும் குடியிருப்பு வளாகத்தில் தள்ளுவண்டியில் காய்கறிகள், பழங்கள், ஜவுளித்துணிகள் மற்றும் பாத்திரம் விற்பவர்கள் வந்து செல்வது வழக்கம். காவலாளி நியமிக்கப்பட்டு இருந்தாலும் வருபவர்கள் வியாபாரிகள் என்பதால் ஊழியர்களின் வசதிக்காக உள்ளே அனுமதிப்பது உண்டு.
நேற்று முன்தினம் மதியம் 12 மணி அளவில் 3 பேர் ஆட்டோவில் வந்து துணி மற்றும் பாத்திரம் விற்பவர்கள் என்று கூறி உள்ளனர். ஆட்டோவை டிரைவர் வளாகத்தில் நிறுத்தி இருக்க, அதில் இருந்த 3 பேர்அடுக்குமாடி குடியிருப்பின் மாடிகளில் ஏறி உள்ளனர். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அரசு பணிக்காக அலுவலகங்களுக்கு சென்று விட்டதாலும், பள்ளி,கல்லூரிகளுக்கு குழந்தைகள் சென்றதாலும் பல வீடுகள் பூட்டி கிடந்துள்ளது.
நில அளவைத்துறையில் வருவாய்த்துறை அதிகாரியாக உள்ள ஒருவரின் வீடு ‘ஏ’ பிளாக் கட்டிடத்தில் உள்ளது. இந்த நிலையில் அந்த வீட்டை நோட்டமிட்ட 3 பேரும்,அவரது வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அறையில் இருந்த பீரோவை திறந்து பணம், நகையை திருடினர். அதே பிளாக்கில் உள்ள மேலும் 2 அதிகாரிகளின் வீடுகளின் பூட்டை உடைத்து திருடினர்.
அதன்பின்னர் ‘பி’ பிளாக் கட்டிடத்தில் உள்ள 10 வீடுகளில் இதேபோல் அடுத்தடுத்து பூட்டை உடைத்து திருடியுள்ளனர். பட்டப்பகலில் ஒரு மணிநேரத்துக்குள் இந்த வீடுகளில் இருந்து மொத்தம் 42 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கப்பணம், அரைகிலோ வெள்ளி பொருட்களை வாரி சுருட்டிக்கொண்டு கீழே தயாராக நின்ற ஆட்டோவில் ஏறி எதுவும் தெரியாதது போல் சென்றுவிட்டனர்.
மாலையில் 13 வீடுகளில் வசிக்கும் அதிகாரிகள், ஊழியர்கள் தங்களது வீடுகளுக்கு வந்து பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் தொடர்புடைய 3 கொள்ளையர்களையும் விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் மேற்பார்வையில், துணை கமிஷனர்கள் தேவநாதன், கார்த்திகேயன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டோவில் வந்த 3 பேர் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து ஆட்டோவின் பதிவு எண்ணை கைப்பற்றி ஆட்டோ உரிமையாளரின் செல்போன் எண்ணை சேகரித்து விசாரித்தனர். அப்போது கோவைப்புதூர் குளத்துப்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் தங்கி இருந்த வடமாநில கும்பலை சேர்ந்த 3 பேர் 13 வீடுகளில் திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 9.15 மணியளவில் அந்த வீட்டுக்கு போலீசார் சென்றனர். அங்கு பதுங்கி இருந்த 3 பேரையும் பிடிக்க முயன்றபோது, தலைமைக் காவலர் பார்த்திபன் என்பவரை அவர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்றனர். இதனால் போலீசார் அவர்களின் காலில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 பேரும் துப்பாக்கி குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ்கள் மூலம் அவர்கள் 3 பேரும் கொண்டு செல்லப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில்,கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உ.பி ஜில்லாகாசிபூர் பகுதியைச் சேர்ந்த ஆசிப்(48) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் சுட்டதில் காலில் காயமைந்த ஆசிப்புக்கு தொடர்ச்சியாக ரத்தம் வெளியேறிதால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.