தவெகவிற்கு மட்டுமே தானாக கூட்டம் கூடும்: பிற கட்சிகள் பணம் கொடுத்து கூட்டுகிறார்கள்: புஸ்சி ஆனந்த்
தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என உச்சத்தை விட்டுட்டு விஜய் வந்துள்ளார் என்று புஸ்சி ஆனந்த் கூறினார்.;
பெருந்துறை,
திருச்செங்கோட்டில் தவெக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியதாவது: “ஒவ்வொரு தொகுதியிலும் விஜய்யின் அறிவுறுத்தலின்படி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று சோழிங்கநல்லூர், இன்று திருச்செங்கோட்டில் நடைபெறுகிறது.
இங்கே நான் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். தவெகவின் வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மட்டும் தான் அறிவிப்பார். ஊடகங்கள் தயவு செய்து எதையாவது ஒன்றை போட்டுவிடாதீர்கள். செங்கோட்டையன் சொல்வதை நாங்கள் செய்வோம். எந்த கட்சியாவது எங்களைப்போல் மாநாடு நடத்த முடியுமா. மற்ற கட்சிகள் எல்லாம் ரூ.200, ரூ.300 கொடுத்து தான் கூட்டம் கூட்ட வேண்டும். ஆனால் விஜய் வருகிறார் என சொன்னால் கூட்டம் தானாக வந்து சேரும்.
ஈரோட்டில் வரும் 18-ம் தேதி தவெக கூட்டம் நடைபெற உள்ளது. அன்று செங்கோட்டையன் கலக்குவார். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தலைவர் விஜய் தான் வேட்பாளர்.அனைத்து தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறுவதற்கு அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். தலைவர் விஜய் உச்சத்தை விட்டுட்டு வந்துள்ளார். தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என உச்சத்தை விட்டுட்டு வந்துள்ளார். கூடிய விரைவில் தவெகவுக்கு அருமையான சின்னம் வழங்கப்பட உள்ளது. சின்னம் வந்த 15 நிமிடத்தில் உலகப் புகழ் பெறும்.”என்றார்.