திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைதிறப்பு, பூஜை கால நேரங்களில் மாற்றம்

மார்கழி மாதத்தை ஒட்டி நடைதிறப்பு, பூஜை கால நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-12-09 20:57 IST

கோப்புப்படம்

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதேபோல் திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம். குறிப்பிட்ட மாத காலங்களில் மட்டும் காலையில் கோவில் நடைதிறப்பு மற்றும் பூஜை கால நேரங்கள் மாறுபடும்.

இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் மார்கழி மாதத்தை ஒட்டி நடைதிறப்பு, பூஜை கால நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மார்கழி ஒன்றாம் தேதியான டிசம்பர் 16-ம் தேதி முதல் மார்கழி 30-ம் தேதியான ஜனவரி 14-ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது.

தொடர்ந்து 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 4.45 மணிக்கு மேல் 5 மணிக்குள் உதய மார்த்தாண்ட தீபாராதனையும், காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி தீபாராதனையும், காலை 6 மணிக்கு மேல் கால சந்தி தீபாராதனையும், 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடைபெற உள்ளது.

மேலும் மாலை 3.30 மணிக்கு சாயரட்சையும், 6 மணிக்கு ராக்கால அபிஷேகமும், 7 மணிக்கு ராக்கால தீபாராதனையும், 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனையும், 8 மணி முதல் 8.30 மணிக்குள் பள்ளியறை திருக்காப்பிடுதல் பள்ளியறை தீபாராதனை நடைபெறுகிறது. இதில் டிசம்பர் 17-ம் தேதி மற்றும் ஜனவரி 1-ம் தேதி பகல் 2.30 மணிக்கு பிரதோஷ அபிஷேகம் நடைபெற உள்ளது.

மார்கழி மாதம் 17-ம் தேதி 2026 ஆம் ஆண்டு ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது. ஜனவரி 3-ம் தேதி மார்கழி மாதம் 19-ம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்