கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை உடனடியாக கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் - டிடிவி தினகரன்
பயிர்க்காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
காவிரி டெல்டா பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை உடனடியாக கணக்கீடு செய்து அதற்கான உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
டிட்வா புயலின் காரணமாகக் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்சாகுபாடி முழுமையாக மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
வடகிழக்கு பருவமழையின் தொடக்கக் காலத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இன்றுவரை இழப்பீடு வழங்கப்படாத நிலையில், தற்போது டிட்வா புயலின் தாக்கத்தினால் வயல் வெளியில் குளம்போல தேங்கியிருக்கும் மழைநீரும், அதில் மூழ்கியிருக்கும் நெற்பயிர்களும் காவிரி டெல்டா விவசாயிகள் மீளவே முடியாத அளவிற்குப் பேரிடியாக அமைந்துள்ளது.
டிட்வா புயலின் தாக்கத்தினால் வழக்கத்திற்கு மாறாகப் பெருமழை பொழிந்து வரும் நிலையில், நாளையுடன் நிறைவடைய இருக்கும் பயிர்க்காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அனைத்து தரப்பு விவசாயிகளின் மத்தியிலும் எழத்தொடங்கியுள்ளது.
எனவே, காவிரி டெல்டா பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை உடனடியாக கணக்கீடு செய்து அதற்கான உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்குவதோடு, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து நாளையுடன் நிறைவடைய இருக்கும் கால அவகாசத்தை மேலும் நீட்டிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.