பங்குனி உத்திரம்: திருத்தணியில் நாளை அதிகாலை 3 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதி

நாளை காலையில் இருந்து மலைக்கோவிலுக்கு அனைத்து வாகனங்களும் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.;

Update:2025-04-10 21:36 IST

சென்னை,

தமிழகத்தின் வடக்கு எல்லையாக விளங்கும் ஊர் திருத்தணி. முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடு; முருகப் பெருமானின் சக்தி வாய்ந்த திருத்தலங்களில் ஒன்று.தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர்புரிந்து, கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணிகை. தேவர்கள் பயம் நீங்கிய இடம்.

திருத்தணி முருகன் கோவில் மிகவும் பழமையானது. அருணகிரிநாதர் இத்தலத்தை போற்றி 63 திருப்பாடல்களை பாடினார். இத்தலம் 600 ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்று இருந்திருக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்பே பல்லவ, சோழ மன்னர்களால் இத்தலம் போற்றப்பட்டுள்ளது என தெரிகிறது.பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் ராமலிங்க அடிகள், கந்தபைய தேசிகர், கச்சியப்ப முனிவ கச்சியப்ப சிவாச்சாரியார் மற்றும் அருணகிரிநாதர் முதலிய சான்றோர்கள் திருத்தணி முருகனை பெரிதும் புகழ்ந்துள்ளனர்.

இந்தநிலையில், திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப் பெருமானை தரிசித்து செல்கின்றனர். நாளை முருகனுக்கு உகந்த நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்கான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. பங்குனி உத்திரத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் நாளை(ஏப். 11) அதிகாலை 3 மணி முதல் பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், திருத்தணி மலைக் கோயிலுக்கு செல்வதற்கு அனைத்து வாகனங்களுக்கும் நாளை தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் திருத்தணி பஸ் நிலையம் அருகே உள்ள தணிகை இல்லத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்