திருச்சி விமான நிலையத்தில் அரியவகை ஆமைகள் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் குருவி என்ற போர்வையில் அரியவகை உயிரினங்கள் கடத்தி வரும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.;
திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், வியட்நாம், தோஹா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், பெங்களூரு, சென்னை, டெல்லி, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமானத்தில் அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த விமான பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தபோது அதில் அரியவகை உயிரினங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் 32 அரியவகை ஆமைகள், 3 அரியவகை அணில் (ரங்கூன்), 13 அரிவகை ஓணான் (கிரீன் இகுவானா) ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் குருவி என்ற போர்வையில் அரியவகை உயிரினங்கள் கடத்தி வரும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதை தடுக்க வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.