தனியார் வாகனங்களில் சிவப்பு, நீல நிற விளக்குகள் பயன்படுத்த கூடாது: தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை

உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி சிவப்பு, நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை தனியார் வாகனங்களில் பயன்படுத்துவது சட்டவிரோதமானது.;

Update:2025-11-19 02:17 IST

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் வாகனங்களில் சிவப்பு, நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த விளக்குகள் அவசர வாகனங்களான ஆம்புலன்சு, போலீஸ் துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகிய வாகனங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.

உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி சிவப்பு, நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை தனியார் வாகனங்களில் பயன்படுத்துவது சட்டவிரோதமானது. மேலும் தனியார் வாகனங்கள் இந்த சிவப்பு-நீல நிற விளக்குகளை பயன்படுத்துவதால் பொதுமக்கள் அவசர ஊர்திக்கு வழிவிடும் சூழ்நிலையை குழப்பம் அடைய செய்வதுடன், அவசர ஊர்திக்கான மதிப்பை பொதுமக்கள் மத்தியில் குறைய செய்கிறது.

Advertising
Advertising

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இதுபோன்ற சிவப்பு, நீல நிற விளக்குகளை தனியார் வாகனங்களில் பயன்படுத்தினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் அதனை தாங்களாகவே 2 நாட்களுக்குள் நீக்கம் செய்ய வேண்டும். மேலும் வாகன உரிமையாளர் அல்லது ஓட்டுனர்கள் வாகனங்களில் தொடந்து அந்த விளக்குகளை பயன்படுத்தினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இருசக்கர வாகனங்களில் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்யலாம். இரண்டு பேரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக பயணித்து சாலை விதிகளை மதித்து சட்டப்படியான நடவடிக்கைகளை தவிர்க்க பொதுமக்கள் போலீசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்