உப்பள தொழிலை பாதுகாக்க நடவடிக்கை: முதல்-அமைச்சருக்கு உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை
தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் தனியார் நிறுவன தொழிற்சாலை மற்றும் கப்பல் கட்டும் விரிவாக்க தளம் அமைக்க இடங்கள் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது.;
தூத்துக்குடி துறைமுகம் மற்றும் அதை ஒட்டிய கடலோரப் பகுதிகள் முள்ளக்காடு கிராமம் பகுதி 1 மற்றும் 2 ஆக இருந்து வருகிறது. இந்த கடலோர பகுதிகளில் இந்திய நாடு சுதந்திரப் போராட்டத்தின் போது காந்தி சத்யாகிரக போராட்டம் நடத்திய காலம் முதல் பாத்தி அமைத்து மக்கள் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி, எம்.சவேரியார்புரம், பழையகாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உப்பளங்கள் இருந்து வருகிறது. இதில் தன்பாடு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் அமைத்து, தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் தனியார் நிறுவன தொழிற்சாலை மற்றும் கப்பல் கட்டும் விரிவாக்க தளம் அமைக்க இடங்கள் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் தொழிலில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் உப்பள பகுதியில் ஆய்வு நிகழ்ச்சி நடத்தும் வகையில் திட்டமிடப்பட்டு வருவாய்த் துறையினர் வர இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து முள்ளக்காடு ஊர் முகப்பில் உப்பு உற்பத்தியாளர்கள் சேகர், சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், சிவாகர், பாலசுப்பிரமணியன், மகாராஜன், பொன்ராம், ஊராட்சித் தலைவர் கோபிநாத் நிர்மல், துணைத் தலைவர் ராஜ்குமார் மற்றும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனர்.
இத்தகவலைத் தொடர்ந்து போலீசாரும் பாதுகாப்பிற்காக அங்கு வந்தனர். ஆனால் நீண்ட நேரமாக யாரும் வராததால், அனைவரும் கலைந்து சென்றனர். இந்த நிலையில் ரகசியமாக கடலோரப் பகுதியில் சாமியான பந்தல் அமைத்து ஆய்வு நிகழ்ச்சி நடத்த முயற்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அங்கு உடனடியாக நேரில் சென்ற உப்பள தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்த கிராம நிர்வாக அதிகாரிகளான திருவேங்கடசெல்வி மற்றும் பிரேமலதா ஆகியோர் தீவிர முயற்சி எடுத்தனர்.
இதன் மூலம் முள்ளக்காடு கடலோர பகுதியில் பரபரப்பான பதட்டமான சூழல் காணப்பட்டது. அப்போது தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டி உள்ள விருந்தினர் மாளிகை பின்புறமாக கடற்கரையை ஒட்டிய மணற்பகுதி கடல் நீர் வழியாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாகனத்தில் வந்த சில அதிகாரிகள் இதனைக் கண்டு வந்த வழியாகவே திரும்பி சென்றனர்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் இருந்து வந்து பந்தல் அமைத்தவர்கள், உடனடியாக பந்தலை பிரித்துக் கொண்டு அங்கிருந்து சென்றனர். இந்த நிலையில் தன்பாடு உப்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் மந்திரமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தபோது
கூறுகையில், "இந்தப் பகுதியில் உப்பு உற்பத்தி தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு பல தலைமுறைகளாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இதன்படி தூத்துக்குடி முதல் புன்னக்காயல் வரை உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சம் பேர் இதனை தொழில் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளோம்.
இந்த நிலையில் ஒரு தொழிலை அழித்து மற்றொரு தொழில் தொடங்க இருப்பதாக கூறப்படுவது நியாயமா? ஒரு லட்சம் மக்களுக்கு அரசு துணை நிற்க வேண்டாமா? இதே போன்ற நிலை 1998-ம் ஆண்டு வந்தபோது தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளராக இருந்த என்.பெரியசாமி மூலம் முதல்-அமைச்சரை சந்தித்து பேசியபோது அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி ஒரு தொழிலை அழித்து மற்றொரு தொழில் வரக்கூடாது என்று கூறினார்.
எனவே அவரது வழியில் அவரது மகன் ஸ்டாலின் முதல்-அமைச்சராக ஆட்சி நடைபெறும் நிலையில் தற்போது மீண்டும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கி உள்ளனர். இதுகுறித்து தற்போது மாவட்ட செயலாளராக உள்ள அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஆகியோர் உறுதியான முயற்சி எடுத்து, தூத்துக்குடியில் மின்சார கார் விற்பனையை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்-அமைச்சரிடம் பேசி ஒரு லட்சம் மக்களின் வாழ்வாதாரமான உப்பள தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.