அரசு பஸ்சில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: நடத்துநர் கைது
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் நடத்துநரை போலீசார் கைது செய்தனர்.;
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 16 வயதான மாணவி அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஒரத்தநாட்டில் உள்ள ஒரு பள்ளிக்கு திறனாய்வு போட்டி தேர்வு எழுத சென்றார். தேர்வு முடிந்து அந்த மாணவி ஒரத்தநாட்டில் இருந்து வீட்டுக்கு செல்ல ஒரு அரசு பஸ்சில் சென்றார். அப்போது அந்த பஸ்சில் கண்டக்டராக இருந்த பாபநாசம் தாலுகா நரியனூர் பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது47) பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி வீட்டுக்கு சென்றதும் பஸ் கண்டக்டர் பாலியல் தொல்லை கொடுத்த விவரத்தை அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோர் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் கண்டக்டர் சுதாகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.