சேவைக்குறைபாடு: தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.10.60 லட்சம் வழங்க உத்தரவு

தூத்துக்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர், ஒரு தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் குடும்ப ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார்.;

Update:2025-11-29 07:27 IST

தூத்துக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ரகுபதி ராஜா என்பவர் ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் குடும்ப ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். இந்த பாலிசியில் அவரது குடும்பத்தினரையும் சேர்த்து காப்பீடு செய்துள்ளார். இவரது மனைவி சாந்தி ரகுபதி என்பவர் தங்களது குழந்தைகளை பார்ப்பதற்காக இங்கிலாந்து சென்றிருந்த போது வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னை திரும்பி அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

அதன் பின்னர் இந்த பணத்தை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்கனவே இருந்த நோயை மறைத்து பாலிசி எடுத்ததாக கூறி சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது. இதைக் கண்ட புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட மருத்துவ செலவுத் தொகை ரூ.10 லட்சம், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.50,000 வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.10,60,000-ஐ 6 வார காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் அந்த தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்