ஊழியரின் வீட்டு காது குத்தும் விழாவிற்கு சீர்சுமந்து வந்த சிங்கப்பூர் முதலாளிகள் - புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி

முதலாளிகளை வரவேற்கும் வகையில் சாரட் வண்டிகளை ஏற்பாடு செய்து அவர்களை மேள தாளங்கள் முழங்க ஆறுமுகம் அழைத்து வந்தார்.;

Update:2025-10-31 20:48 IST

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ரோஜா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தனலெட்சுமி. இந்த தம்பதிக்கு லட்சயா என்ற மகளும், தரணீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். ஆறுமுகம் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், ஆறுமுகம் தனது மகன் மற்றும் மகளுக்கு காது குத்தும் விழா நடத்த திட்டமிட்டார். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட ஆறுமுகம், தனது முதலாளிகளான ஷ்யாம், ஆல்பர்ட் மற்றும் எஸ்தர் ஆகியோருக்கு அழைப்பிதழ் கொடுத்து, அவர்களை விழாவில் கலந்து கொள்ள வருமாறு அழைத்துள்ளார்.

அவரது அழைப்பை ஏற்று, இன்று ஆலங்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஆறுமுகத்தின் மகன் மற்றும் மகளின் காது குத்தும் விழாவிற்கு அவரது முதலாளிகள் மூவரும் வருகை தந்தனர். அவர்கள் ஆறுமுகத்தின் பிள்ளைகளுக்கு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி தாய்மாமனைப் போல் சீர்சுமந்து வந்தனர். அவர்களின் மடியில் ஆறுமுகத்தின் பிள்ளைகள் அமரவைக்கப்பட்டு அவர்களுக்கு காது குத்தப்பட்டது.

மேலும் ஆறுமுகம் தனது சிங்கப்பூர் முதலாளிகளை வரவேற்கும் வகையில் சாரட் வண்டி, குதிரை வண்டிகளை ஏற்பாடு செய்து அவர்களை மேள தாளங்கள் முழங்க ஊரே வியந்து பார்க்கும் வகையில் ஊர்வலமாக அழைத்து வந்து அசத்தினார். தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரின் வீட்டு விழாவிற்கு சிங்கப்பூரில் இருந்து முதலாளிகள் வருகை தந்ததும், அவர்களுக்கு ஆறுமுகம் அளித்த சிறப்பான வரவேற்பும் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்