வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்றுடன் நிறைவு- படிவம் கொடுக்காதவர்களுக்கு கடைசி வாய்ப்பு
இதுவரை படிவங்களை வாங்கி பூர்த்தி செய்யாத வாக்காளர்கள் இன்றே இந்த இறுதி சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிரப்பி கொடுக்க வேண்டும்.;
சென்னை,
தமிழகத்தில் கடந்த 2002-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்று வருகின்றன. 1.1.2026 தேதியில் 18 வயது பூர்த்தியடைபவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கின. ஒவ்வொரு வாக்காளருக்கும் வீடுவீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கினர். அந்த படிவங்களை பூர்த்தி செய்ததும் அவற்றை வாங்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். இந்தப் பணிகள் இன்று (11-ந்தேதி) முடிகின்றன. இதுவரை படிவங்களை வாங்கி பூர்த்தி செய்யாத வாக்காளர்கள் இன்றே இந்த இறுதி சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிரப்பி கொடுக்க வேண்டும்.
இதற்கிடையே கடந்த நவம்பர் 4-ந்தேதி முதல் 10-ந்தேதி (நேற்று) வரை நடந்த எஸ்.ஐ.ஆர். பணிகளின் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டு உள்ளார்.அதில், தமிழகத்தில் உள்ள 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று வரை 6 கோடியே 41 லட்சத்து 10 ஆயிரத்து 380 படிவங்கள், அதாவது 99.99 சதவீதம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. 4,207 வாக்காளர்கள் மட்டுமே படிவங்களை பூர்த்தி செய்து தரவில்லை.
மேலும், 6 கோடியே 40 லட்சத்து 83 ஆயிரத்து 413 படிவங்கள் அதாவது 99.95 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இந்தப் பணிகளுக்கு 68 ஆயிரத்து 470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளனர். 2.46 லட்சம் அரசியல் கட்சி முகவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். எஸ்.ஐ.ஆர். பணிகள் இன்று நிறைவடைந்ததும் அந்த விவரங்களை அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்குவார்கள். அவர்களும், தகுதியுள்ள வாக்காளர்கள் யாரும் விடுபட்டுவிடாதபடி ஆய்வு செய்வார்கள்.