கூட்டணியில் குழப்பம் விளைவிக்க சிலர் முயற்சி: மா.செ. கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.;
சென்னை,
அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பேரவைத் தேர்தல் வியூகம், கூட்டணி, தொகுதிகள் நிலவரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை, "திராவிடப் பொங்கல்"-னு சிறப்பாக கொண்டாட வேண்டும் என கேட்டுக்கிட்டேன். அதை கட்டளையாக ஏத்துக்கிட்டு, தமிழ்நாடு முழுக்கவும் கழகத்தின் சார்பில், முன்னெடுத்த திராவிடப் பொங்கல் கொண்டாட்டம், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
கழகத்தின் சார்பில் செய்யப்பட்ட கொண்டாட்டங்களுடன், அரசு சார்பில் நாம் வழங்கிய 3 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும், மக்களின் மகிழ்ச்சிய இரு மடங்கு ஆக்கியிருக்கிறது!
பொங்கல் கொண்டாட்டம் முடிந்து, எல்லாரும் ரெஸ்ட் இல்லாமல் தேர்தல் பணிக்குத் தயாராக வேண்டும்.
இன்றைய ஆளுநர் உரையில் நாம் கடந்த 5 ஆண்டுகளில் செய்த திட்டங்களை தலைப்புச் செய்திகளாக சொல்லியிருக்கோம். இவ்ளோ திட்டங்களை நிறைவேத்தி இருப்பதாலதான் எதை வைத்து அரசியல் செய்வது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகளே திண்டாடுகிறார்கள். உண்மையான பிரச்சினைகள் பெரிதாக இல்லாததால், வீண் அவதூறுகளைப் பரப்பி, மக்களை குழப்ப நினைக்குறாங்க. அதுக்கு நாம் துளிகூட இடம் கொடுத்து விடக் கூடாது. அதனால்தான், நம் சாதனைகளை எல்லாம், தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும், ஒவ்வொரு தனிநபருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
நம் அரசின் திட்டங்களால் சுமார் 2 கோடி மக்கள் பயனடைகிறார்கள். ஒரு குடும்பம் விடாமல் எல்லாரும் நம் திட்டங்களால் பயனடைய வேண்டும் என பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்திட்டு இருக்கோம்! அந்த பயனாளிகள் எல்லோரையும், இனிமேல் நம்மோட வாக்காளர்களாக உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு, உங்களிடம்தான் இருக்கு.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து BLA2-க்களை வைத்து, மண்டல அளவில் பெரிய கூட்டங்களை நடத்தினோம். கடந்த தேர்தலில் முழுமையான வெற்றியை பெற்றோம். அதன்பிறகு, BLC-களை நியமிக்கும் பணிகளை தொடங்கி நூறு வாக்காளர்களுக்கு ஒருத்தர்னு BLC-களை நியமிச்சிருக்கோம். அடுத்து இப்பொழுது, 4 மண்டலங்களிலும் அவர்களைத் திரட்டி மாநாடு நடத்தப் போறோம். இதுவே ஒரு மண்டலத்துக்கு கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொள்ளும் அளவுக்கு பெரிய மாநாடுகளாக இருக்கும்.
நல்லா கேட்டுக்குங்க... தேர்தல் நெருங்கிடுச்சு. இனி நம் சிந்தனை - செயல் எல்லாத்துலயும் வெற்றி என்ற ஒற்றை இலக்கு மட்டும்தான் இருக்க வேண்டும்.
இங்கு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள்., எம்.பி.க்கள் எல்லாரும் இருக்கீங்க. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க நான் தயங்கமாட்டேன். "தேர்தல் வருது நடவடிக்கை எடுக்கமாட்டார்"-னு மட்டும் நினைக்காதீங்க. தனிநபர்களை விட கட்சிதான் பெரிது.
அதேமாதிரி, எல்லாரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும்.
களத்தில் மக்கள் ஏதாவது குற்றம் குறைகளைச் சொன்னால் பொறுமையாக பதிலளிக்க வேண்டும். உங்கள் முகத்தில் தப்பித்தவறிகூட, கோபமோ –ஆணவமோ - அதிருப்தியோ வெளிப்படக் கூடாது.
அதே போல, நம் தோழமைக் கட்சிகளில், நம்மை பிடிக்காத ஒருசிலர் இருக்கத்தான் செய்வார்கள். அவர்கள், தேவையில்லாத கருத்துகளைப் பேசி, கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க நினைக்கலாம். அத்தகைய சூழ்ச்சிக்கு நாம் யாரும் பலியாகிடக் கூடாது. தெளிவாகச் சொல்கிறேன்... கூட்டணி - தொகுதி பங்கீடு - இதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். எந்த தொகுதியில் யார் நின்றாலும் 234 தொகுதிகளிலும் நான்தான் களம் காண்பதாக நினைத்து, 100 சதவீத உழைப்பைக் கொடுத்து களப்பணி ஆற்ற வேண்டும்.
நாம ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்து பணியாற்றுங்கள். உட்கட்சி பிரச்சினைகள் எதுவும் எழக் கூடாது. எல்லோரையும் அரவணைத்துப் போக வேண்டிய பொறுப்புகளில் இங்க இருக்கும் எல்லாரும் இருக்கிறீர்கள்.
இந்தியாவிலேயே ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, ரொம்ப உறுதியாக, வலிமையாக இருப்பது நாமதான்-னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு. அதனால, நம்மை எப்படியாவது வீழ்த்திட பல சதித் திட்டங்கள் நடக்கும். அது எல்லாத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து உடைத்து, ஒரு வலிமையான கட்சியாக இருக்க வேண்டும் என்றால் அடுத்த 3 மாதத்துக்கு உங்கள் உழைப்பு, பொறுமை எல்லாம் ரொம்ப முக்கியம்.
உங்களை நம்பித்தான் நான் இருக்கிறேன். நம்மை நம்பித்தான் தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள்.
வெல்வோம் இருநூறு! படைப்போம் வரலாறு!
இவ்வாறு அவர் கூறினார்.