எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலகக் குழு கூட்டம் : நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?

இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.;

Update:2025-11-05 21:25 IST

சென்னை,

எஸ்டிபிஐ கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலகக்குழு கூட்டம் சென்னையில் இன்று (நவ.05) நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முகமது இலியாஸ் தும்பே, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் முகமது அஷ்ரப் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். மேலும், மாநில துணைத் தலைவர்கள் அப்துல் ஹமீது, அச.உமர் பாரூக், மாநில பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அகமது நவவி, அபூபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், மாநில செயலாளர் ஷபீக் அஹம்மது, மாநில செயற்குழு உறுப்பினர் அமீர் ஹம்சா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1:

ஜனநாயகத்தின் அடித்தளமான வாக்குரிமை, ஒவ்வொரு குடிமகனின் கையில் உள்ள வலிமையான ஆயுதமாகும். ஆனால், இந்த உரிமை பறிபோகும் அச்சத்தை இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதாகக் கூறி பீகாரில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் லட்சக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட தலித், சிறுபான்மையினர் சமூகங்களைச் சேர்ந்த விளிம்புநிலை வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

மட்டுமின்றி, தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை குடியுரிமைத் திருத்தச் சட்டத்துடன் (CAA) இணைத்து மேற்கொள்ளப்படுவதாலும், மிகப்பெரும் அளவிலான வாக்காளர் திருத்த நடவடிக்கைக்கு மிகக் குறுகிய கால அவகாசத்தில் நடத்தப்படுவதாலும் ஆணையத்தின் நடவடிக்கை இயல்பாகவே ஐயத்தை ஏற்படுத்துகிறது. இதற்கெதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ள போதும், எதிர்ப்புகளை மீறி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் நவம்பர் 04 முதல் தொடங்கியுள்ளது.

பீகாரில் பல்வேறு குளறுபடிகளுடன், விளிம்புநிலை மக்களின் வாக்குரிமையைப் பறித்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை கேள்விக்குட்படுத்தப்பட்டு, அது உச்சநீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில், அதன் மீது உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில் தமிழகத்தில் இதனை மேற்கொள்வது ஏற்புடையதல்ல. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் ஐயம் உள்ள நிலையில், தமிழக அரசு சட்டரீதியாக இதனை எதிர்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் எஸ்டிபிஐ கட்சியும் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

ஆகவே, தமிழக அரசும், குடிமக்களும், ஜனநாயக சக்திகளும் இந்நடவடிக்கையில் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்துவதோடு, வாக்குரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் மிக மிக முக்கியமானது என்பதால், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் தங்கள் வாக்குரிமையை உறுதி செய்துகொள்ள வேண்டும் எனவும் எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2:

நாட்டின் பிரதமர் என்ற உயரிய பதவி, அனைத்து மாநிலங்களையும், இனங்களையும் ஒருங்கிணைத்து தேசிய ஒற்றுமையைப் பேணுவதற்கான பொறுப்பைக் கொண்டது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாட்டை இலக்காக வைத்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தேர்தல் ஆதாயத்திற்காகவே பிளவு அரசியலைத் தூண்டும் வெறுக்கத்தக்க நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இத்தகைய பொய்ப் பிரச்சாரங்கள் மாநிலங்களிடையே இனவெறுப்பைத் தூண்டி, சமூக நல்லிணக்கத்தைச் சிதைக்கும் ஆபத்தானவை.

தமிழ்நாடு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான, அமைதியான வாழிடமாகத் திகழ்கிறது. பீகார், ஒடிசா, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் இங்கு கட்டுமானம், தொழிற்சாலைகள், விவசாயம், சேவைத் துறை உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு எந்த இடையூறும் இன்றி மாநில அரசின் பாதுகாப்பும் உரிமைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், அவர்களின் உழைப்பு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத பங்களிப்பை அளிக்கிறது.

ஆனால், பிரதமரின் இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களின் பாதுகாப்பு உணர்வைச் சிதைக்கின்றன. இது சமூக நல்லிணக்கத்தை அச்சுறுத்துவதோடு, மாநிலங்களிடையேயான உறவுகளையும் பாதிக்கும்.

எனவே, பிரதமர் நரேந்திர மோடி இக்கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என எஸ்டிபிஐ வலியுறுத்துகிறது. மேலும், தேர்தல் ஆணையம் இத்தகைய வெறுப்புப் பிரச்சாரத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்கும் சட்டங்களின்படியும் தேர்தல் விதிமுறைகளின்படியும் இதற்கெதிரான நடவடிக்கைகள் அவசியமாகும். நாட்டின் ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்க அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3:

எதிர்வரும் 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை கருத்தில்கொண்டு, எஸ்டிபிஐ கட்சியின் மாநில அளவிலான ‘தொகுதி நிர்வாகிகள் மாநாடு’ கடந்த செப்.13 அன்று திருச்சி சமயபுரத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேர்தல் பணிகளை மேலும் திறம்பட செயல்படுத்துவதற்காக, தொகுதி வாரியாக பூத் பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. அதனைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக பூத் ஏஜெண்டுகளுக்கான மாநாடு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத இறுதிக்குள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டங்களில், பூத் ஏஜெண்டுகளுக்கு தேர்தல் நடைமுறைகள், வாக்குச்சாவடி மேலாண்மை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, மற்றும் தேர்தல் ஆணைய விதிமுறைகள் குறித்து விரிவான பயிற்சி அளிக்கவும், கட்சியின் கொள்கைகளை வாக்காளர்களிடம் திறம்பட எடுத்துச் செல்வதற்கான உத்திகள் மற்றும் பிரச்சார முறைகள் குறித்தும் இந்தக் கூட்டங்களில் பயிற்சிகள் வழங்கிடவும், 2026 தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு இந்நடவடிக்கைகளை துரிதப்படுதத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தீர்மானம் 4:

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாளான (நவம்பர் 11) தேசிய கல்வி தினத்தன்று, அதனை சிறப்பிக்கும் வகையில், எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாநில அளவில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்காக மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் மேற்கொண்ட முன்னெடுப்புகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் நிகழ்வுகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ப்ரீ-மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக மீண்டும் செயல்படுத்த வேண்டும் எனவும், ஒன்றிய அரசு புறக்கணித்தாலும் தமிழக அரசு அதற்கான நிதியை ஒதுக்கி அதனைச் செயல்படுத்த வேண்டும் எனவும் எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்