கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;

Update:2026-01-11 16:30 IST

கோப்புப்படம் 

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

அரசின் நலத் திட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்வது; பேரிடர் காலப் பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்வது; நிலங்களின் வகைகள், விளையும் பயிர்களின் விவரம், நிலவரி விவரம், பிறப்பு இறப்பு விவரம், முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்புவது; தேர்தல் பணிகளை மேற்கொள்வது என பல்வேறு இன்றியமையாப் பணிகளை செம்மையாக செய்து வருபவர்கள் கிராம உதவியாளர்கள். இப்படிப்பட்ட கிராம உதவியாளர்கள் வாழ்வாதாரம் மேம்பட்டு இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை. காலமுறை ஊதியத்திற்காக காலம் காலமாக போராடிக் கொண்டிருக்கும் அவல நிலைக்குதான் கிராம உதவியாளர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் பணிபுரிவதாகவும்; அலுவலகப் பணி, களப் பணி, தேர்தல் பணி என அனைத்துப் பணிகளையும் இரவு பகல் பாராமல் மேற்கொண்டு வருவதாகவும்; வருவாய்த் துறையில் பணிபுரியும் இரவுக் காவலர்கள், அலுவலக உதவியாளர்கள், சமையலர்கள் உள்ளிட்ட அனைவரும் காலமுறை ஊதியம் பெற்று வருவதாகவும்; கிராம உதவியாளர்கள் மட்டும் சிறப்பு காலமுறை ஓய்வூதியத்தில் பணியாற்றி வருவதாகவும்; இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு சலுகைகள் தங்களுக்கு கிடைப்பதில்லை என்றும்; அரசுத் துறையில் ஒரு பிரிவினருக்கு மட்டும் சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயிப்பது ஒருதலைபட்சமானது என்றும் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

கிராமங்களின் ஆணிவேராக திகழும் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டு வருகிறது. கிராம உதவியாளர்களாக பணிபுரிபவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த ஏழையெளிய மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக வேலைப்பளு, குறைந்த ஊதியம் என்ற ரீதியில் அவர்களது பணி இருந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கும் செயல் ஆகும்.

கிராம உதவியாளர்களின் பணி நிலைமையையும், அவர்களது கோரிக்கையில் உள்ள நியாயத்தினையும் கருத்தில் கொண்டு, கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்