உசிலம்பட்டி அம்மன் கோவிலில் இருந்து திருடப்பட்ட மாணிக்கவாசகர் சிலை மீட்பு - இருவர் கைது
மாணிக்கவாசகர் சிலையை மோட்டார் சைக்கிளில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.;
மதுரை,
கடந்த 10-ந் தேதி நெல்லை சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வனிதாராணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், பெர்லின்பால், முத்துரஜினிகாந்த் மற்றும் போலீசார், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டி கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த நபர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில் 1½ உயரத்தில் 3½ கிலோ எடை கொண்ட மாணிக்கவாசகர் சிலை ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் உசிலம்பட்டி வெள்ளக்காரப்பட்டியை சேர்ந்த காசிமாயன் (வயது 43) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. காசிமாயன் தனக்கு பழக்கமான சோலை, வேல்முருகன், மதன் ஆகியோருடன் சேர்ந்து உசிலம்பட்டி ஆனையூர் கிராமத்தில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் புகுந்து, அங்கிருந்த உலோகத்தினால் ஆன மாணிக்கவாசகர் சிலையை திருடியுள்ளனர்.
மேலும் அந்த சிலையை விற்பதற்காக உசிலம்பட்டி பாப்பாபட்டியை சேர்ந்த தவசி (65) என்பவரை அணுகியுள்ளனர். அவரும் இவர்களுடன் சேர்ந்து இந்த சிலையை விற்பதற்காக முயற்சி செய்து வந்தார். இதற்காக காசிமாயன் அந்த சிலையை பையில் எடுத்து வந்தபோதுதான் போலீசாரிடம் சிக்கியுள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காசிமாயனை கைது செய்த போலீசார், அவருக்கு உடந்தையாக இருந்த தவசியையும் அதிரடியாக கைது செய்தனர்.
அதேபோல் கடத்தப்பட்ட மாணிக்கவாசகர் சிலை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சிலை திருட்டில் தொடர்புடைய மற்ற நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சிலை கடத்திய 2 பேரை கைது செய்து சிலையை மீட்ட இன்ஸ்பெக்டர் வனிதா ராணி மற்றும் போலீசாரை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் கூடுதல் டி.ஜி.பி. கல்பனா நாயக் பாராட்டினார்.