தூத்துக்குடியில் மாணவிகள் உள்பட 29 பேரை கடித்து குதறிய தெருநாய்கள்

ஓட்டப்பிடாரம், கடையநல்லூரில் மாணவிகள் உள்பட 29 பேரை தெருநாய்கள் கடித்து குதறின.;

Update:2025-10-09 05:06 IST

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலையில் வழக்கம்போல் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது பள்ளிக்கூட நுழைவுவாயில் அருகில் நின்ற தெருநாய் திடீரென்று மாணவ-மாணவிகளை விரட்டிச் சென்று கடித்து குதறியது. இதனால் மாணவ-மாணவிகள் அலறியடித்து ஓடினர். உடனே ஆசிரியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தெருநாயை விரட்டினர்.

வெறிநாய் கடித்ததில் காயமடைந்த மாணவிகள் பிரவீனாதேவி (வயது 12), மலர்விழி (13), கனிஷ்கா (16), தேவி உமா மகேஸ்வரி (16), நித்யஸ்ரீ (15), மாணவர்கள் சைமன் (11), முத்துமணிஷ் (13) ஆகிய 7 பேருக்கு கச்சேரிதளவாய்புரம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், மாணவி கபிலா தர்ஷினி (14) உள்பட 4 பேருக்கு ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் மாணவ-மாணவிகளை பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.

இதேபோன்று தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி முத்துகிருஷ்ணாபுரம் வானவர் கோவில் தென்வடல் தெருவை சேர்ந்த பகத்சிங் மகள் உத்ராவை (7) நேற்று காலையில் பாட்டி செல்லம்மாள் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு அழைத்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த தெருநாய் திடீரென்று சிறுமி உத்ராவின் கையில் கடித்தது. உடனே செல்லம்மாள் புத்தகப்பையால் தெருநாயை விரட்டினார்.

காயமடைந்த சிறுமி உத்ராவுக்கு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே, சிறுமியை கடித்த தெருநாய் அப்பகுதி வழியாக சென்ற மேலும் 17 பேரை கடித்து குதறியது. 17 பேர் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்