விபத்துக்குள்ளான காரை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் கைது

காரை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று சப்-இன்ஸ்பெக்டர் கேட்டுள்ளார்.;

Update:2025-10-31 07:06 IST

கோப்புப்படம் 

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜ் (40 வயது). இவர் கடந்த மாதம் 14-ந்தேதி பைக்கில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பேரண்டூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாராட்சி கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் (30 வயது) என்பவர் ஓட்டிச் சென்ற கார், சண்முகராஜ் சென்ற பைக் மீது மோதியது.

இதில் சண்முகராஜ் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். காரை விடுவித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு ஆய்வுக்கு அனுப்ப ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அஜித்குமாரிடம் ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் (53 வயது) கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அஜித்குமார் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசனிடம் புகார் அளித்தார். அவரது ஆலோசனைப்படி அஜித்குமார் ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்துடன் நேற்று ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையம் சென்றார்.

அங்கு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீஸ் நிலையத்தில் டேட்டா ஆபரேட்டராக வேலை செய்யும் சுகுமார் ஆகியோரிடம் லஞ்ச பணத்தை அஜித்குமார் கொடுத்தபோது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்