தேசிய அளவில் தமிழ்நாடு ரத்ததானத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது - மா.சுப்பிரமணியன்

2024-25 ஆம் ஆண்டு 4.50 லட்சம் ரத்த அலகுகள் சேகரிக்க இலக்கு, ஆனால் 4,354 முகாம்கள் மூலம் 4.53 லட்சம் ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டது.;

Update:2025-10-10 17:24 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று (10.10.2025) சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், தேசிய தன்னார்வ ரத்த தான நாள் 2025 விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டு, தன்னார்வ ரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கும், வாழ்நாளிலில் 50 முறைக்குமேல் தன்னார்வ இரத்த கொடையாளர்களுக்கும், அதிக அளவில் தன்னார்வ இரத்த கொடையாளர்களை இணையவழியில் பதிவு செய்தவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்கள். பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தேசிய தன்னார்வ ரத்த தான தினம் இன்று மிகச் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் பல்வேறு மக்கள் நலப்பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மத்திய அளவில், “தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையானது பிற மாநிலங்களுக்கு தன்னார்வ ரத்ததானத்தில் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தின் கருப்பொருள் “ரத்த தானம் செய்வோம், நம்பிக்கை கொடுப்போம், ஒன்றாக இணைந்து நாம் மனித உயிர்களைக் காப்போம்” (Give Blood, Give Hope: Together We Save Lives) என்பதாகும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 101 அரசு ரத்த மையங்கள் மற்றும் 252 தனியார் ரத்த மையங்கள் செயல்பட்டு வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 415 ரத்த சேமிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் ரத்தம் தேவைப்படும் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் தரமான ரத்தம் உரிய நேரத்தில் கிடைத்திடும்வகையில் அதிநவீன மற்றும் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய 32 நடமாடும் ரத்த ஊர்திகளும் மற்றும் 2 நடமாடும் ரத்த தான ஊர்திகளும் (Mobile Bus) சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றது.

2024-25 ஆம் ஆண்டு அரசு மற்றும் தனியார் ரத்த மையங்கள் மூலமாக, 9.50 லட்சம் ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. புதுடெல்லியிலுள்ள சுகாதார பொது இயக்குநரகத்தால் 2024-25 ஆம் ஆண்டில், 4.50 லட்சம் ரத்த அலகுகள் சேகரிக்க அரசு ரத்த மையங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த ஆண்டில், உரிமம் பெற்ற அரசு ரத்த மையங்களில், தன்னார்வ இரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் மூலமாக, 4,354 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு, 4.53 லட்ச ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டு, தமிழ்நாடு 101 விழுக்காட்டை அடைந்துள்ளது.

பொதுவாக மருத்துவர்கள் கூற்றின்படி நம் ஒவ்வொருவரின் உடலிலும், சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. இந்த ரத்ததானத்தின்போது 350 மி.லி. முதல் 450 மி.லி. ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண் 3 மாதத்திற்கு ஒரு முறையும், பெண் 4 மாதத்திற்கு ஒரு முறையும் ரத்ததானம் செய்யலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. ரத்ததானம் செய்வதால், உடலில் புதிய அணுக்கள் உருவாகி, தானம் செய்வோரின் உடல்நலனும் காக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் எடுத்துரைக்கின்றனர்.

தமிழ்நாட்டில், ரத்த மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக e-RatKosh என்ற வலைதளம் செயல்பாட்டில் உள்ளது. இதில் ரத்த வகைகளின் இருப்பைத் தெரிந்துகொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள், இதனை பயன்படுத்தி, தங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் எளிதில் ரத்தம் பெற்றுக் கொள்ளலாம். தன்னார்வ ரத்ததானத்தின் அருமையை வலியுறுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள், 'தேசிய தன்னார்வ ரத்ததான தினமாக’ கொண்டாடப்படுகிறது. மாவட்ட அளவிலான, தேசிய தன்னார்வ ரத்த தான தின நிகழ்வில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர்களின் செயல்களை பாராட்டி, அந்தந்த மாவட்ட ஆட்சியர் அவர்களால் கவுரவப்படுத்தப்பட்டனர்.

அதேபோல், மாநில அளவிலான நிகழ்வில், ஒவ்வொரு அரசு ரத்த மையங்களிலிருந்து, அதிக ரத்ததான முகாம்கள் மூலம், அதிக ரத்த அலகுகள் சேகரிக்க உறுதுணையாக இருந்த இரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் கவுரவப்படுத்தப்படுகின்றனர். அந்தவகையில் இன்று 150 அமைப்புகள், தன்னார்வலர்கள், அமைப்புகள், மையங்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை 527 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 18,264 புதிய ரத்ததான கொடையாளர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாயிலாக கடந்த 2 மாதங்களில் மட்டும 14,847 அலகுகள் ரத்தம் கொடையாக பெறப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரியின் செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் கல்லூரிகள், நியூ கல்லூரி ராயப்பேட்டை, ஆர்.கே.நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் இருந்து 268 மாணவ மாணவியர்கள் குருதி கொடையை தந்து சிறப்பித்துக்கொண்டிருக்கிறார் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்