தென்காசி: சுவீட் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.30 லட்சம் நகை-பணம் கொள்ளை

25 பவுன் தங்க நகைகள், வெள்ளி மற்றும் ரூ.40 ஆயிரம் பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.;

Update:2026-01-10 17:10 IST

தென்காசி,

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரது மகன் முருகேசன் (வயது 30). இவர் ஆழ்வார்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் சுவீட் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றார். இதற்காக வீட்டை பூட்டி விட்டு அனைவரும் புறப்பட்டு சென்ற நிலையில், இன்று அதிகாலையில் முருகேசன் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த முருகேசன் ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். முருகேசன் குடும்பத்தினர் வீட்டில் இல்லை என்பதை அறிந்து மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கதவு, வீட்டின் அறைகளில் படிந்திருந்த கைரேகை மாதிரிகளை சேகரித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதனிடையே அதே பகுதியில் வசிக்கும் நாலாயிரம் என்ற சலவை தொழிலாளி உள்பட மேலும் 2 பேரின் வீடுகளில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்