பல் மருத்துவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன்

திமுக தலைவர்கள் அவரவர் பிள்ளைகளுக்கு பதவிகள் கிடைப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பல் மருத்துவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம், திமுக அரசின் அலங்கோல ஆட்சிக்கான மற்றொரு சான்று. விடியா அரசிடம் இருந்து தங்களின் வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ள, தூய்மைப் பணியாளர்கள் முதல் அரசு மருத்துவர்கள் வரை அனைவரும் தெருவில் இறங்கிப் போர்க்கொடி பிடிக்கத் துவங்கிவிட்டனர்.

நாடு போற்றும் நல்லாட்சி எனத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கே இந்த நிலை எனில், அரசு வேலையை நம்பி பல கனவுகளோடு காத்திருக்கும் தமிழக இளைஞர்களின் நிலை அந்தோ பரிதாபம் தான்! பல லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு, தற்காலிக அரசு ஊழியர்களுக்குப் பணி நிரந்தரம், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பலன் என வாய்க்கு வந்த வாக்குறுதிகளை வாரி இறைத்து ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த நான்கரை ஆண்டுகளாக ஊழல் செய்வதிலும், ஊற்றிக் கொடுப்பதிலும், விளம்பர விழாக்களிலும் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருப்பது வெட்கக்கேடு.

அவரவர் பிள்ளைகளுக்கு ஆட்சி அதிகாரம், அமைச்சர் பதவிகள் கிடைப்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்ட திமுக தலைவர்கள், தங்களை நம்பி வாக்களித்த தமிழகப் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கைகழுவி விட்டுவிட்டது அப்பட்டமான நம்பிக்கை துரோகம். போன தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையே காப்பாற்றும் நேர்மையற்றவர்கள், தேர்தல் அறிக்கை என்ற பெயரில் அடுத்த தேர்தலுக்கான பொய் பட்டியலைத் தயாரிப்பதற்கு ஒரு குழுவை வேறு அமைத்துள்ளார்களாம்! எல்லாம் காலக் கொடுமை!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com