‘ஜனநாயகத்தின் குரல் மீண்டும் ஓங்கி ஒலித்துள்ளது’ - ஆதவ் அர்ஜுனா

ஆதிக்க உணர்வுக்கும், அடக்குமுறைக்கும் எதிரான தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ளது என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.;

Update:2025-11-21 20:50 IST

சென்னை,

கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் பலியான நிலையில், த.வெ.க. நிர்வாகிகளை காவல் துறை கைது செய்து வந்தது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கரூர் துயர சம்பவம் தொடர்பாக தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், தமிழக அரசை எச்சரிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த பதிவை ஆதவ் அர்ஜுனா நீக்கிவிட்டார்.

ஆனால் இந்த பதிவின் அடிப்படையில் அவர் மீது சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கலவரத்தை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜுனா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

உள்நோக்கத்துடன் கருத்து பதிவிடவில்லை என்றும், அந்த பதிவு உடனே அது நீக்கப்பட்டுவிட்டதாகவும் ஆதவ் அர்ஜுனா தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

இதனையடுத்து, ‘ஜனநாயகத்தின் குரல் மீண்டும் ஓங்கி ஒலித்துள்ளது’ என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஜனநாயகத்தின் குரல் மீண்டும் ஓங்கி ஒலித்துள்ளது. ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான கருத்துரிமைக்கு தொடர்ந்து நெருக்கடியை கொடுத்துவரும் ஆட்சியாளர்களின் ஆதிக்க உணர்வுக்கும், அடக்குமுறைக்கும் எதிரான ஒரு தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ளது.

ஜனநாயக உரிமைகள் பறிபோகிற நேரங்களில் எல்லாம், அவற்றை மீட்டுக் கொடுத்து, ஜனநாயகத்தைக் காக்கும் மன்றங்களாக உள்ள நீதிமன்றங்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். ஆதிக்கம் எங்கெல்லாம் தலைதூக்குகிறதோ, அங்கெல்லாம் நம்முடைய எதிர்ப்புக் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்