திருத்தணி ரெயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை; செல்வப்பெருந்தகை
திருத்தணி ரெயில் நிலையத்தில் புடவை வியாபாரியை சில இளைஞர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.;
திருத்தணி ரெயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
திருத்தணி ரெயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வடமாநில இளைஞர் ஒருவரை 4 சிறார்கள் காட்டுமிராண்டித்தனமாக கொடூரமாக தாக்குதல் நடத்தினார்கள். இன்று அதே ரெயில் நிலையத்தில் புடவை வியாபாரி ஒருவரை சில இளைஞர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். தொடர்ச்சியாக அந்த ரெயில் நிலையத்தில் இத்தகைய தாக்குதல் நடைபெறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத ரெயில் நிலையமாக திருத்தணி ரெயில் நிலையம் உள்ளது. இவ்வளவு நடந்தும் அந்த பகுதிகளில் பாதுகாப்பிற்கு காவலர்கள் இல்லாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எந்தவகையிலும் இத்தகைய குற்ற செயல்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது.
வரும் காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியை ரெயில்வே நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து, காவலர்களை நியமித்து பொதுமக்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.