தமிழ்நாடு அயோத்தியாக மாறுவதில் எந்த தவறும் இல்லை - நயினார் நாகேந்திரன் பேட்டி
தி.மு.க. ஆட்சிக்காலத்தின் அடுத்த 100 நாட்கள் எண்ணப்படுகிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை பாரிமுனையில் இருந்து தொண்டர்களுடன் பேரணியாக நடந்து சென்று, ராஜாஜி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
தமிழகத்தை அயோத்தியாக மாற்ற பா.ஜ.க. முயற்சிக்கிறது, தமிழகத்தில் மதவாத அரசியல் எடுபடாது என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். நான் கேட்கிறேன், அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது. அயோத்தி இங்கிலாந்து, ஐரோப்பாவில் இல்லையே. அயோத்தி போல தமிழ்நாடு மாறுவதில் எந்த தவறும் இல்லை.
நம் அனைவருக்கும் ராமரின் ஆட்சியை பற்றி தெரியும். எனவே, தேசிய ஜனநாயக கூட்டணி, ராமரின் ஆட்சியை தரும். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும். அதேநேரம் பக்கத்தில் தர்கா இருப்பதும் அனைவருக்கும் தெரியும். எனவே, தர்கா அருகில் செல்லாமல், தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி அனுமதி அளித்திருக்கிறார். தர்கா சம்பந்தப்பட்டவர்களோ, இஸ்லாமியர்களோ யாரும் ஒருவர் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே.
அங்கே மத கலவரம் வருவதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை அழித்துவிடுவோம் என கூறியிருக்கிறார். அதற்கான ஆரம்பகட்ட வேளையில் தற்போது அவர் ஈடுபடுவது தெரிகிறது. அவருடைய கனவு பலிக்காது. எத்தனை யுகங்கள் ஆனாலும் சரி, சனாதன தர்மத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் 100 நாட்கள்தான் இருக்கிறது. தி.மு.க.வின் ஆட்சிக்காலத்தின் அடுத்த 100 நாட்கள் எண்ணப்படுகிறது.
அமித்ஷா எப்போது வேண்டுமானாலும் தமிழகம் வருவார். கூட்டணியில் நிறைய கட்சிகள் சேரும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். தி.மு.க. கூட்டணியில்தான் குழப்பம் இருக்கிறது. அதில் சந்தேகமே இல்லை. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை இடங்களை தி.மு.க. கொடுக்கும், அமைச்சரவையில் அவர்களுக்கு தி.மு.க. இடம் கொடுப்பார்களா? என்பதெல்லாம் அங்கு குழப்பம்தான். இவ்வாறு அவர் கூறினார்.