தமிழகத்தில் இந்த தேர்தலில் 4 முனை போட்டி இருக்கும்: டிடிவி தினகரன்
கூட்டணிக்கு தலைமை ஏற்று இருக்கும் சில கட்சிகள் எங்களோடு பேசி வருகின்றனர் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்;
திருப்பூர்,
அ.ம.மு.க.பொது ச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருப்பூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,
அ.தி.மு.க. ஒன்றாக இருந்தால் தான் அடுத்த நூற்றாண்டுக்கும் எடுத்து செல்ல முடியும். சட்டமன்ற தேர்தல் முடிவிற்கு பிறகு தூங்கிக்கொண்டு இருப்பவர்கள், தூங்குவது போல நடிப்பவர்கள் ஒருங்கிணைவார்கள் என எதிர்பார்க்கிறேன்.பதவி ஆசை, சுயலாபத்திற்காக பிரித்து விட்டார்கள். அவர்களாக திருந்த வேண்டும். அல்லது அவர்களை யாராவது எழுப்ப வேண்டும். அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என பா.ஜ.க., தலைவர்கள் முயற்சி செய்தார்கள். இப்போதும் செய்கிறார்கள்.ஒரு கட்சியில் பிரச்சனையை சரி செய்ய மத்தியஸ்தர் தேவை. மற்ற கட்சியில் இருந்து வந்து கூட்டணிக்காக பேசுவதை தவறாக நினைக்கவில்லை. அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க., அதிகாரத்தை வைத்து மிரட்டுவதாகவும் நான் நினைக்கவில்லை.
தமிழகத்தில் இந்த தேர்தலில் 4 முனை போட்டி தான் இருக்கும். நான் சொன்னதை புரிந்து கொள்ளாமல் தினகரன் 5-வது அணி அமைப்பார் என பேசினார்கள். ஆனால் அது உண்மை இல்லை. தமிழகத்தில் 4 முனை போட்டி தான் இருக்கும். வெற்றியை நோக்கி எங்கள் கூட்டணி அணிவகுக்கும்.
கூட்டணிக்கு தலைமை ஏற்று இருக்கும் சில கட்சிகள் எங்களோடு பேசி வருகின்றனர். இறுதி வடிவம் அடைந்த பிறகு உறுதியாக தெரிவிக்கிறேன். எங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை. நட்பு ரீதியாக பேசி உடன்பாடு எட்டப்படும். அ.ம.மு.க., இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும். அ.ம.மு.க.வில் தேர்தலுக்காக அனைத்து நிலை உறுப்பினர்களையும் தயார்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.