திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.;
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடு திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த 1ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும் கார்த்திகை தீபத்தினமான 3ம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அதற்கு மாறாக மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து, 3ம் தேதி மாலை மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபத்தூணில் தீபம் ஏற்றம் ஐகோர்ட்டு மதுரை கிளை மீண்டும் உத்தரவிட்டது. அந்த உத்தரவையும் தமிழக அரசு அமல்படுத்தவில்லை. மேலும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. அந்த மேல் முறையீட்டை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட மதுரை ஐகோர்ட்டு அமர்வு தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி 2 முறை உத்தரவிட்டும் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை மதுரை ஐகோர்ட்டில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.