திருவள்ளூர்: ஊதுபத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், எர்ணாக்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.;
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், எர்ணாக்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் ஊதுபத்தி, சாம்பிராணி உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்து, பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தொழிற்சாலைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை திடீரென தொழிற்சாலையில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேர்வாய் சிப்காட் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்க போராடினர். எனினும் தீயானது மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் கரும்புகை சூழ தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
தொடர்ந்து பொன்னேரி, கண்டிகை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளிலிருந்து மேலும் 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தகவலை அறிந்து தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீ விபத்தில் சுமார் 10 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று விடுமுறை நாள் என்பதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.