திருவள்ளூர்: அரசு பஸ் மோதி வாலிபர் பலி; கர்னூல் போல் மற்றொரு சம்பவம் தவிர்ப்பு
வாலிபரின் மோட்டார் சைக்கிள் பஸ்சுக்கு அடியில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது.;
திருத்தணி,
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் நல்லாட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ்பாபு. இவரது மகன் கீர்த்திவாசன் (வயது 25). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு கீர்த்திவாசன் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக நல்லாட்டூர் கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கனகம்மாசத்திரம் அடுத்த ரகுநாதபுரம் அருகே சென்றபோது, சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற அரசு பஸ் (தடம் எண் 201) முன்னே சென்று கொண்டிருந்த கீர்த்திவாசன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கீர்த்திவாசன் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தார். மேலும் அவரது மோட்டார் சைக்கிள் பஸ்சின் அடியில் சிக்கி கொண்டு சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. இதனால் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பஸ் டிரைவர் மற்றும் பொதுமக்கள், பஸ்சுக்கு அடியில் எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த கீர்த்திவாசனை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் கீர்த்திவாசன் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்து உள்ளனர்.
இந்த விபத்து குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலியான கீர்த்திவாசனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய அவர், பஸ் மோதி பலியான சம்பவம் நல்லாட்டூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற ஆம்னி பஸ், முன்னால் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பஸ்சுக்கு அடியில் சிக்கிய மோட்டார்சைக்கிளின் பெட்ரோல் டேங்க் வெடித்து ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் பலியானார்கள். அதே பாணியில் நடைபெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை உடனடியாக அணைத்துவிட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.