"மக்களால் நான்.. மக்களுக்காக நான்".. ஜெயலலிதா எனும் பெண் ஆளுமை! - இன்று 9-வது நினைவு தினம்

1991, 2001, 2011, 2016 என 4 முறை முதல்-அமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா வகித்தார்.;

Update:2025-12-05 06:25 IST

கோப்புப்படம்

சென்னை,

"மக்களால் நான்.. மக்களுக்காக நான்" என்ற கர்ஜனை குரலுக்கு சொந்தக்காரர், ஜெயலலிதா. அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்து இன்றோடு 9 ஆண்டுகள் ஆனாலும், அ.தி.மு.க. தொண்டர்களால் என்றென்றும் போற்றப்பட்டு வருகிறார்.

ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த அரசியல் களத்தில், பெண்களாலும் சாதிக்க முடியும் என்று காலூன்றி ஜெயித்து காட்டியவர், ஜெயலலிதா. கடுமையான சவால்களுக்கு மத்தியில், அரசியலில் 9 ஆண்டுகளில் பிரமிக்கத்தக்க எழுச்சியை பெற்றார்.

எல்லா அரசியல் தலைவர்கள் போல ஜெயலலிதாவும் அரசியல் வாழ்வை எளிதாக கடந்துவரவில்லை. அதுவும் இவர் பெண் என்பதால், அரசியல் பாதை சற்று கடினமாகவே அமைந்தது.

திரைத்துறையில் வாழ்க்கை பயணத்தை தொடங்கிய இவர், 1982-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். நடிப்பின் மூலம் பிரபலமானவர் என்பதால், அப்போது அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

1987-ம் ஆண்டு முதல்-அமைச்சர் பதவியில் இருந்தபோதே எம்.ஜி.ஆர். மறைந்தார். அவருக்கு பிறகு அ.தி.மு.க. ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாக உடைந்தது. முதல்-அமைச்சர் பொறுப்பை எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ஏற்றார். 1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களில் வெற்றி பெற்றது. ஜானகி தலைமையிலான அணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 



இந்த நிலையில், ஜானகி அரசியல் களத்தில் இருந்து விலகினார். அதன்பிறகு, ஒன்றிணைந்த அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். 1991, 2001, 2011, 2016 என 4 முறை முதல்-அமைச்சர் பொறுப்பை வகித்தார்.

முதல்-அமைச்சராக முதல் முறை (1991) பதவி வகித்தபோது, அதிக வருமான ஆதாரங்கள் இருந்ததால், சம்பள காசோலையை ஏற்க ஜெயலலிதா மறுத்துவிட்டார். அப்போது அவர் 1 ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றார்.

தொட்டில் குழந்தை திட்டம், காவல் பணியில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு, அம்மா உணவகம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப், தாலிக்கு தங்கம், ஏழைகளுக்கு விலையிலல்லா ஆடு-மாடுகள், கோவில்களில் அன்னதானம், திருநங்கைகளுக்கு மாத உதவித்தொகை என பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

அரசியலில் உச்சம் தொட்ட ஜெயலலிதாவுக்கு பிறக்கும்போது சூட்டப்பட்ட பெயர் அது கிடையாது. முதலில் அவருக்கு சூட்டப்பட்ட பெயர் கோமளவள்ளி. பிறகு அது ஜெயலலிதாவாக மாறியது. பள்ளித் தோழிகளால், ஜெயா, ஜெய், லில்லி என பல பெயர்களில் அழைக்கப்பட்டார். அவரது அம்மா அவரை அம்மு என்று அழைத்தார். ஆனால், அ.தி.மு.க. தொண்டர்களோ அவரை அம்மா என்று பாசத்துடன் அழைத்தனர்.

ஜெயலலிதா தனது தொடக்க பள்ளி படிப்பை மாம்பலத்தில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் முடித்தார். 5-ம் வகுப்பு வரை அங்கு படித்து முடித்தபிறகு, மேல் வகுப்பை சர்ச் பார்க் பள்ளியில் படித்தார்.

திரைத் துறையில் ஜெயலலிதா நடித்த படங்கள் 115. எம்.ஜி.ஆருடன் நடித்தவை 28. இருவரும் இணைந்து நடித்த முதல் படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. இப்படி திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர், ஜெயலலிதா.

2016-ம் ஆண்டு முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், செப்டம்பர் 22-ந் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, 70 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த போதிலும், சிகிச்சை பலனளிக்காமல் இதே நாளில் (டிசம்பர் 5) இம் மண்ணைவிட்டு மறைந்தார்.

அவர் உற்சாகமாக அடிக்கடி கூறும் வார்த்தை, "எனக்கு பின்னாலும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. இயங்கும்" என்பதுதான். ஆனால், அவர் மறைந்து 9 ஆண்டுகள்தான் ஆகிறது. அவர் கட்டிக்காத்த அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை குறித்து விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. 



Tags:    

மேலும் செய்திகள்