வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள் - அடுத்த மாதம் 17-ந்தேதி இறுதி பட்டியல் வெளியாகிறது
வரைவு பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க இன்று கடைசி நாளாகும்.;
கோப்புப்படம்
சென்னை,
தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் 4-ந்தேதி சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணி என்கிற எஸ்.ஐ.ஆர். பணி தொடங்கியது. இந்த பணி தொடங்கும் முன்பு, தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். வாக்காளர்களின் வீடு, வீடாக சென்று சம்பந்தப்பட்ட பூத் லெவல் அலுவலர்கள் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை கொடுத்து அதனை பூர்த்தி செய்து பெற்று வந்தனர். இந்த படிவங்களில், சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் கடந்த 2002 மற்றும் 2005-ம் ஆண்டு இருந்த சட்டசபை தொகுதிகளின் விவரங்கள் கேட்கப்பட்டு இருந்தன.
இந்த விவரங்கள் இல்லாதவர்கள், தங்களது பெற்றோரின் விவரங்களையும், அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அந்த அடிப்படையில், கடந்த மாதம் (டிசம்பர்) 14-ந்தேதி வரை வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து கொடுப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக 19-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 757 வாக்காளர்கள் மட்டுமே இடம்பெற்று இருந்தனர். அதாவது 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.
அதாவது அதில் இறந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 9 ஆயிரம் ஆகும். இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் முகவரியில் வசிக்காதவர்கள் எண்ணிக்கை மட்டும் 66 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் 3.98 லட்சம் ஆகும். இந்த வரைவு பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஜனவரி 18-ந்தேதி வரை கால அவகாசம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி அதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது.
இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சுமார் 18 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். பெயர்களை நீக்க 32 ஆயிரத்து 288 மனுக்கள் வந்துள்ளன. எனவே மனு கொடுக்க விரும்புவர்கள் சம்பந்தப்பட்ட பூத் லெவல் அதிகாரிகளிடம் கொடுக்கலாம். அதற்கு இன்றே கடைசி நாளாகும். பெறப்பட்ட இந்த மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 17-ந்தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.