நாளை தவெக தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம்
தவெக தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.;
சென்னை,
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அனைவருக்கும் வணக்கம். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ளும் குழுவை கட்சியின் தலைவர் விஜய் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்கள். இந்தக் குழு, நாளை (21.01.2026-புதன்கிழமை) மாலை 4.00 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பிரசாரக் குழுவினர் மட்டுமே பங்கேற்பார்கள் என்பதைக் கழகத் தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.