த.வெ.க. தொண்டர் அணி பனையூரில் நாளை ஆலோசனை
நாளை கூட்டத்தில் தொண்டர் அணியினருக்கு கட்சி தலைமை சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.;
சென்னை,
த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் கட்சி தொண்டர்களின் பாதுகாப்பிற்காக த.வெ.க. தொண்டர் அணி உருவாக்கப்பட்டுள்ளது. தொகுதிக்கு 2 பேர் வீதம் 234 சட்டமன்ற தொகுதிகளில் 468 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என்ற அடிப்படையில் தலா 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பனையூரில் த.வெ.க. தொண்டர் அணியின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. நாளை கூட்டத்தில் தொண்டர் அணியினருக்கு கட்சி தலைமை சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ளும் பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை தொண்டர் அணி மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், மண்டலம் முதல் பூத் வரை த.வெ.க. சார்பில் வழக்கறிஞர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி மண்டலத்திற்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் மற்றும் 10 இணை ஒருங்கிணைப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 25 பூத்திற்கு ஒரு வழக்கறிஞர், ஒரு கிளைக்கு 3 கிளை வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் வரை மாவட்ட செயலாளருடன் இணக்கமாக பயணிக்க வழக்கறிஞர் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் த.வெ.க.வினர் மீது பதியப்படும் பொய் வழக்குகளை எதிர்கொள்ளவும் வழக்கறிஞர் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.