அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்காமல் இருக்க துரித நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்காமல் இருக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.;
கோப்புப்படம்
சென்னை,
சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தீபாவளி பண்டிகை பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ பயனாளிகளை நேற்று முன்தினம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், தீ விபத்து சிகிச்சை வார்டுகளின் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகளுடன் தேநீர் அருந்தி, இனிப்புகள் வழங்கி கலந்துரையாடினார்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, வட்டார அரசு மருத்துவமனைகளிலும் தீபாவளிக்கென்று சிறப்பு சிகிச்சை வார்டுகள் தொடங்கப்பட்டிருகிறது. குறிப்பாக, 36 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கை வீதம் தீவிர சிகிச்சைப் பிரிவிற்காக தீக்காய பிரிவு வார்டுகள் தொடங்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 20 படுக்கை வசதிகளுடன் கூடிய வெண்டிலேட்டர் கருவியுடன் கூடிய வார்டுகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தனித்தனி வார்டுகள் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த 19-ந்தேதி முதல் பட்டாசு வெடித்ததில் பாதிக்கப்பட்டு 89 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 48 பேர் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இதில் 8 பேருக்கு சிறிய அளவிலும், 32 பேருக்கு மிகச் சிறிய அளவிலும் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 6 குழந்தைகள் உள்பட 7 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாருக்கும் உயிர் பாதிப்பு பிரச்சினை இல்லை. தீக்காயம் சிகிச்சைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு நல்ல முறையில் டாக்டர்கள் சிகிச்சை வழங்கி வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தமாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருகிறது. கடந்த காலங்களில் எங்கெல்லாம் மழை பாதிப்புகள் அதிகமாக இருந்ததோ அந்த பகுதிகளில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளாக மழைநீர் தேங்கியது. இப்போது அது சரிசெய்யப்பட்டது. தூத்துக்குடியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையின்போது தூத்துக்குடி, ஏரல் ஆகிய அரசு மருத்துவமனைகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளானது. தற்போது அந்த பாதிப்பும் சரிசெய்யப்பட்டுள்ளது. தற்போது எந்தெந்த மருத்துவமனையில் மழைநீர் தேங்கியதோ அங்கு எல்லாம் மாவட்ட ஆட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை நிர்வாகம் அந்த பாதிப்பை சரி செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.