விஜய்க்கு வைகோ கண்டனம்

குற்ற உணர்ச்சியே இல்லாமல் அவர் பொறுப்பற்று நடந்துகொண்டது மிக, மிக தவறான போக்கு ஆகும் என வைகோ தெரிவித்துள்ளார்;

Update:2025-11-05 23:59 IST

சென்னை ,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ  வெளியிட்ட அறிக்கையில்,

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி அன்று குழந்தைகள், தாய்மார்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக பலியாகி உயிரிழந்ததற்கு முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டிய த.வெ.க. தலைவர் விஜய் தரம் தாழ்ந்த முறையில், கண்ணியமற்ற வகையில் திசை திருப்புவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது வெறுப்பையும், கசப்பையும் பொதுக்குழு என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் கொட்டித் தீர்த்திருக்கிறார்.

Advertising
Advertising

நடந்த சம்பவத்துக்கு துளியளவும் வருத்தப்படாமல் குற்ற உணர்ச்சியே இல்லாமல் அவர் பொறுப்பற்று நடந்துகொண்டது மிக, மிக தவறான போக்கு ஆகும்.

பொதுவாழ்வில் ஆத்தி சூடியைக்கூட அறியாத இந்த மனிதர் தான் ஆட்சிக்கு வந்துவிட்டதைப் போலவே கனவுலகத்திலும், கற்பனை வாழ்விலும் திளைக்கிறார். காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார். ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார். அவரது நம்பிக்கைக் கனவுகள் கானல் நீராகிப் போய்விடும்.75 ஆண்டுகளை, ஆம் முக்கால் நூற்றாண்டை கண்ணீரிலும், வியர்வையிலும், கொட்டிய குருதியிலும், சிறைச்சாலைகளிலும் கடந்து வந்த தியாகிகள் கோட்டையாம் தி.மு.க.வை சற்றும் மான வெட்கம் இன்றி எள்ளி நகையாட முனைகின்ற அவரது நிலைமை அனுதாபத்திற்கும், பரிதாபத்திற்கும், கண்டனத்திற்கும் உரியதாகும்.

இனிமேலாவது அவர் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்