குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்ததாக கிராம மக்கள் புகார்: மதுரை அருகே பரபரப்பு
குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்ததாக கிராம மக்கள் பரபரப்பு புகார் தெரிவித்தனர்.;
சோழவந்தான்,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அமைச்சியாபுரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பி, 3 நாட்களாக மக்களுக்கு வினியோகம் செய்தனர்.இந்த குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக கிராம மக்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இந்த குடிநீரை குடித்தவர்கள் வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்கள்.இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்திருப்பதாக கிராம மக்கள் சரமாரி புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.உடனே ஊராட்சிகள் உதவி இயக்குனர் அரவிந்தன், சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ், வாடிப்பட்டி சமூக நலத்திட்ட தாசில்தார் பார்த்திபன், மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி காந்தம் உள்ளிட்ட அதிகாரிகளும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். குடிநீர் தொட்டியின் ஆபரேட்டர் மற்றும் பணியாளர்கள் மேல்நிலை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து கிருமிநாசினி பவுடர் தெளித்தனர். இருந்தாலும் கிராம மக்கள் துர்நாற்றம் வருகிறது, எனவே அந்த ெதாட்டியில் இருந்து வரும் குடிநீரை நாங்கள் பயன்படுத்த முடியாது என்று தெரிவித்தனர். பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் மேல்நிலை தொட்டியில் ஏறி ஆய்வு செய்தனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க இன்று மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, குடிநீரில் மனித கழிவுகள் கலந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இதுசம்பந்தமாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.