திமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்
ஜனநாயகம் என்று வந்துவிட்டால் தொல்லைகள் எல்லாம் இருந்தே தீரும் என்று கமல்ஹாசன் கூறினார்.;
தஞ்சாவூர்,
தஞ்சாவூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கையை நாங்கள் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறோம். எங்கே போய் சேர வேண்டுமோ எங்கள் கொள்கை விளக்கம் எல்லாம் சேர்ந்து அங்கு செயல் வடிவமாக மாறி இருக்கிறது. தேர்தலில் நாங்கள் தோற்றாலும், எங்கள் கொள்கை செயல்பாட்டிற்கு வந்து இருக்கிறது. இது எங்கள் ஆற்றலை விட அறிவை காட்டுகிறது. இனி தான் ஆற்றலை காட்ட வேண்டிய நேரம்.
அன்பு கட்சியை தாண்டியது. அண்ணாவின் மீது எனக்கு இருக்கக்கூடிய அன்பும் அப்படிப்பட்டது தான். பதவி வரும் போது பணிவு வர வேண்டும். துணிவும் வர வேண்டும் தோழா என்று சொன்னார்கள். பதவிக்காக துணிவை இழக்கும் சுயமரியாதை அற்றவர்கள் அல்ல எங்கள் கூட்டம். கட்சிக்கு அப்பாற்பட்டது தான் அன்பு. அதற்கு அப்பாற்பட்டது தொண்டும் தான்.
அதனால் தான் நான் முதலில் அரசியல் கட்சி ஆரம்பிக்காமல் முதலில் தொண்டு பழகி கொண்டு பிறகு அரசியலில் வந்து என்னிடம் நீங்கள் அறிவுரை பெறுவதுபோல், என்னை விட மூத்தவர்களிடம், மூத்த கட்சிகளிடம் அறிவுரை பெற்றுக்கொண்டு கட்சி தொடங்கி இருக்கிறேன். இதில் மாற்றுக்கருத்துகள் இருந்தே ஆக வேண்டும். அதன் பெயர் தான் ஜனநாயகம். ஆனால் நாடு என்று வரும்போது நாம் கூடி நின்றாக வேண்டும்.
நீங்கள் ஏன் தி.மு.க.வுடன் சென்று சேர்ந்தீர்கள்?. நீங்கள் தான் ரிமோட்டை எல்லாம் டி.வி. மேலே தூக்கி போட்டீர்களே? ஏன் மறுபடியும் அங்கே சென்றீர்கள் என கேட்கிறார்கள். ரிமோட்டை தூக்கி போட்டேன். விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்திற்கு உண்டு. தூக்கி போட்ட ரிமோட்டை வேறொரு ஆள் தூக்கிக்கொண்டு ஓடிவிட்டார். ஆகா அங்கே போகக்கூடாது ரிமோட்.
ரிமோட் மாநிலத்தில் இருக்க வேண்டும். கல்வியும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். ரிமோட்டை கொடுப்போமா? நாங்கள். ரிமோட்டை எடுத்து கொண்டு வா. திருப்பி நாம் ஒழித்து வைப்போம். இனிமேலாவது ஒருவரை ஒருவர் அடித்து கொள்ள வேண்டாம். எவனோ வந்து எடுத்து கொண்டு போய் இருக்கிறான். அப்படி எடுத்த முடிவு தான் இந்த கூட்டணி.
இந்த கூட்டணியை புரிந்தால் புரிந்து கொள்ளுங்கள். புரியவில்லை என்றால் சும்மா இருங்கள். ஜனநாயகம் என்று வந்துவிட்டால் இந்த தொல்லைகள் எல்லாம் இருந்தே தீரும். புரிந்து கொள்ளுங்கள். அது வேண்டாம் என்று நினைத்தால் மாற்று அரசியல் என்பது பாசிசம். அது எங்களுக்கு வேண்டாம். இந்த அரசியல் செய்தி போதுமானது. இவ்வாறு அவர் பேசினார்.