கோவையில் உலக புத்தொழில் மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
கோவையில் உலக புத்தொழில் மாநாடு கொடிசியா அரங்கில் 2 நாட்கள் நடக்கிறது.;
கோவை,
கோவையில் கொடிசியா அரங்கில் உலக புத்தொழில் மாநாடு இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) என 2 நாட்கள் நடக்கிறது. தமிழகத்தை உலகின் முன்னணி ஸ்டார்ட்-அப் மையங்களுள் ஒன்றாக நிலை நிறுத்தவும், உலகளாவிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடன் இணைக்கவும், புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதத்திலும் நாட்டில் முதல்முறையாக இந்த புத்தொழில் மாநாடு நடக்கிறது.
இதில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வருகிறார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் விமான நிலையத்தில் இருந்து கொடிசியா வளாகத்திற்கு வருகிறார். அங்கு காலை 9.45 மணிக்கு உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்து முதலீட்டாளர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
மாநாட்டில், 40 நாடுகளை சேர்ந்த 300 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இடம் பெறுகிறார்கள். மத்திய அரசின் 10 துறைகள், 10 மாநிலங்களை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து 15 அரசுத்துறைகள் பங்கேற்கின்றன.
மேலும் 150-க்கும் மேற்பட்ட சர்வதேச, தேசிய உரையாளர்கள், 75-க்கும் மேற்பட்ட தொழில் வளர்மையங்கள், 500-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். வளாகத்தில் 750 அரங்குகள் அமைக்கப்பட்டு 315 நிகழ்ச்சிகள் நடக்கிறது. 2 நாட்களில் மொத்தம் 11 அமர்வுகளில் உரையும், விவாதமும் நடக்கிறது.
பின்னர் சிட்கோ தொழிற்பேட்டை குறிச்சி வளாகத்தில் ரூ.126 கோடியில் 2.46 ஏக்கரில் 8.5 லட்சம் சதுரடி பரப்பளவில் அமைய உள்ள தங்க நகை பூங்காவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.