தாய் இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தாய் இறந்த துக்கத்தில் இருந்த வேலாயுதம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசாமல் மன வருத்தத்துடன் இருந்து வந்தார்.;
கோப்புப்படம்
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் என்ற விஜி (25 வயது). இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறு வயதிலேயே தந்தை இழந்த வேலாயுதம் தனது தாயார் அமுதவள்ளியுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 9-ந்தேதி அமுதவள்ளியும் இறந்துவிட்டார். தாயார் இறந்த துக்கத்தில் இருந்த வேலாயுதம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசாமல் மன வருத்தத்துடன் இருந்து வந்தார். நேற்று காலையில் வேலாயுதத்தின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதுகுறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வேலாயுதம் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், தாயார் இறந்த சோகத்தில் இருந்த வேலாயுதம் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்து மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. இருப்பினும் வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.