சென்னைக்கு 40 கி.மீ. தொலைவில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

பல மணி நேரமாக ஒரே இடத்தில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.;

Update:2025-12-02 09:37 IST

சென்னை,

'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னையை நோக்கி நகர்ந்து வந்த நிலையில், நகர் முழுவதும் கனமழை பெய்தது. சென்னையில் இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தொடர் மழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

இந்நிலையில் சென்னைக்கு அருகே நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு 40 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும், அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அதன் தீவிரத்தை தக்க வைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது என்றும், அதன் பிறகு, கடற்கரையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடற்கரை நோக்கி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது:-

டிட்வா புயலால் சுவர் இடிந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் உயிரிழந்தனர். 582 கால்நடைகள் இறந்துள்ளன. 1,601 வீடுகள் சேதமடைந்துள்ளன

சென்னையில் தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்கள் 11 (330 பேர்), தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை குழுக்கள் 3 (52 பேர்) தயார் நிலையில் உள்ளனர்.

தற்போதைய கணிப்புப்படி டிட்வா புயலால் 85,500 எக்டேர் பயிர் பாதிப்பு எனத் தெரிகிறது. மழைநீர் வடிந்த பின்னர் பயிர் பாதிப்புக் குறித்து முழுமையாக கணக்கெடுத்து உரிய நிவாரணத்தொகை வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்

இவ்வாறு அவர் கூறினார். 

சென்னையில்..

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை நகரின் பல பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீர், சாலைகளில் விழுந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பாரிமுனையில் 26.5 செ.மீ., எண்ணூரில் 26.4 செ.மீ.,

ஐஸ் அவுஸில் 23.1 செ.மீ, பேசின் பிரிட்ஜ்-ல் 20.7 செ.மீ, மணலி புதுநகர் 20.6 செ.மீ., வடபழனி 18.1 செ.மீ., மேடவாக்கம் 17.7 செ.மீ., விம்கோ நகர் 17.6 செ.மீ., தண்டையார்பேட்டை 17.2 செ.மீ., கத்திவாக்கம் 16.8 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:-

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்துள்ளனர். மேலும் இன்று நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்