உருவானது “சென்யார் புயல்” - தமிழகத்திற்கு பாதிப்பா..? வெளியான முக்கிய தகவல்

சென்யார் புயல் வடக்கு சுமத்ரா பகுதியில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உருவானது “சென்யார் புயல்” - தமிழகத்திற்கு பாதிப்பா..? வெளியான முக்கிய தகவல்
Published on

சென்னை,

அந்தமான் அருகே மலாக்கா ஜல சந்தியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதிய புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய 'சென்யார்' என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் சென்யார் புயல் அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு திசையில் நகர்ந்து இந்தோனேசியாவில் கரையை கடக்கிறது. இதன்படி இந்த புயல் வடக்கு சுமத்ரா பகுதியில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

தற்போது சென்யார் புயல் 2,600 கி.மீ தொலைவில் உள்ளதால் தமிழ்நாட்டிற்கு பெரிய அளவில் பாதிப்பும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கையில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், நேற்று முன் தினம் (24-11-2025) மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று (25-11-2025) காலை 8.30 மணி அளவில் மலாக்கா ஜலசந்தி பகுதிகளில், நன்கோவரிலிருந்து (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 740 கிலோ மீட்டர் தொலைவிலும், கார் நிகோபாரிலிருந்து, (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே 870 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டிருந்தது. இது மெதுவாக, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும்.

நேற்று முன் தினம் (24-11-2025) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று (25-11-2025) காலை 5.30 மணி அளவில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் இலங்கை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 8.30 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவியது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (26-11-2025), ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக இன்று 26-11-2025: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com