முற்றிலும் வலு குறைந்த டிட்வா புயல்.. 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் (வெள்ளிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;
சென்னை,
வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல், இலங்கையைக் கடந்து, தமிழகப் பகுதிகளை அடைந்து, டெல்டா, தென், வடமாவட்டங்களில் பரவலாக நல்ல மழையைக் கொடுத்தது. தொடர்ந்து புயல் தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும் நேற்று வரை வலு குறைந்திருந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலைக்குள் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மேலும் வலு குறையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாகவும், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் (வெள்ளிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வட தமிழ்நாட்டில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது முற்றிலும் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நாளை தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் இடி மின்னலுடன் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.